அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில், ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘அடங்க மறு’ எப்படி என்பதை பார்ப்போம்.
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரான ஜெயம் ரவியிடம், ஒரு பெண் கொலை செய்யப்பட்ட வழக்கு ஒப்படைக்கப்படுகிறது. அந்த வழக்கை விசாரிக்கும் ஜெயம் ரவி, அவர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பதோடு, அந்த பெண் போல பல பெண்கள் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதையும், அதற்கு காரணமானவர்கள் யார்? என்பதையும் கண்டுபிடிக்கிறார். ஆனால், அவர்கள் அத்தனை பேரும் பெரிய இடத்து பிள்ளைகள் என்பதால், அந்த வழக்கை கைவிடுமாறும் உயர் அதிகாரிகள் ஜெயம் ரவிக்கு உத்தரவு போட, ஜெயம் ரவியோ, குற்றவாளிகளை அடித்து துவைத்து கைது செய்து சிறையில் அடைக்கிறார். ஆனால், ஆதாரம் எதுவும் இல்லாததால் கைதான சில நிமிடங்களில் வெளியே வரும் குற்றவாளிகள் ஜெயம் ரவியின் குடும்பத்தையே கொலை செய்துவிடுகிறார்கள். அதற்கு காவல் துறையும் உடந்தையாகிறது.
இதனால், தனது போலீஸ் வேலையை ராஜினாமா செய்யும் ஜெயம் ரவி, அதே போலீஸ் மூளையுடன் தனது குடும்பத்தை அழித்த அந்த நான்கு இளைஞர்களையும், அவர் அவர் அப்பாக்கள் கையினாலேயே கொல்ல வைப்பேன், என்று சபதம் போட, அதை எப்படி செய்து முடிக்கிறார் என்பது தான் ‘அடங்க மறு’ படத்தின் கதை.
20 வருடங்களுக்கு முன்பு எடுத்திருக்க வேண்டிய ஒரு கதையை, இப்போது எடுத்திருக்கும் இயக்குநர் கார்த்திக் தங்கவேல், அதை பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் பிரச்சினையை மையப்படுத்தி சொன்னாலும், அதை அழுத்தமாக சொல்ல தவறியிருக்கிறார்.
ஜெயம் ரவிக்கு சவாலே அவரது குறல் தான். ரொம்ப மென்மையான அவரது குரல் இந்த படத்தில் கம்பீரமாக இருக்கிறது, அதுவே அவருக்கு பெரிய வெற்றி என்று சொல்லலாம். மற்றபடி சின்ன சின்ன எக்ஸ்பிரசன்களினால் கவர்பவர், தனது கதாபாத்திரத்தை சிறப்பாகவே கையாண்டிருக்கிறார்.
தெரிந்து கொள்வதற்காக ஹீரோயினாக நடித்தவர் ராஷி கண்ணா என்று சொல்லலாம். மற்றபடி அவரைப் பெற்றி சொல்ல படத்தில் ஒன்னுமில்லை. அழகம் பெருமாள், முனிஷ்காந்த், சம்பத் மற்றும் நான்கு இளைஞர்கள் என்று படத்தில் நடித்தவர்கள் அவர் அவர் வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
சத்யன் சூரியன் ஒளிப்பதிவில் படம் முழுவதும் ஆக்ஷன் மூட் நிறைந்திருக்கிறது. அதிரடியான சண்டைக்காட்சிகள் இல்லை என்றாலும் முழு படத்தையும், ஹீரோ ஜெயம் ரவியையும் எப்போதும் ஆக்ரோஷமாகவே ஒளிப்பதிவாளர் காட்டியிருக்கிறார்.
சாம் சி.எஸ் இசையில் பாடல்கள் பெரிதாக எடுபடவில்லை என்றாலும் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
காக்கி சட்டை போட்டு செய்ய வேண்டியதை, காக்கி சட்டை இல்லாமல் பொதுமக்களில் ஒருவராக இருந்து ஹீரோ செய்கிறார், என்பது தான் இந்த படத்தின் ஒன்லைன் கதை. அதற்கு பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமை என்ற களத்தை பயன்பத்தியிருக்கும் இயக்குநர் கார்த்திக் தங்கவேல், தமிழ் சினிமா அடித்து துவைத்து கிழித்த பழைய பார்முலாவை பயன்படுத்தியிருப்பது தான் படத்தின் மிகப்பெரிய பலவீனம்.
முதல் பாதியிலே படத்தின் கதை என்னவென்று இயக்குநர் சொல்லிவிடுகிறார். பிறகு அந்த நான்கு இளைஞர்களை அவர்களது அப்பாக்கள் கையினால் ஜெயம் ரவி எப்படி கொல்ல வைக்கப் போகிறார், என்பது மட்டுமே இரண்டாம் பாதியாக இருப்பதால், தலைப்பில் இருக்கும் வீரியம் திரைக்கதையில் இல்லாமல் போகிறது.
போலீஸாக ஹீரோவை காட்டிவிட்டு, அவரது நடவடிக்கைகளை கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் தெரிந்தவராக காட்டுவது சினிமாத்தனமாக இருக்கிறது. அதேபோல், வில்லன் தரப்பில் பவர்புல்லான வேடம் எதுவும் இல்லாததும் படதிற்கு பலவீனமாக அமைந்திருக்கிறது.
பழைய கதையை பழையபடியே எடுத்திருக்கும் இயக்குநர் கார்த்திக் தங்கவேல், படத்தில் எந்தவித ட்விஸ்ட்டும் வைக்காமல், திரைக்கதையை நகர்த்தியிருப்பது ரசிகர்களை சோர்வடைய செய்துவிடுகிறது.
மொத்தத்தில், ‘அடங்க மறு’ பழைய சோற்றை புதிய பாத்திரத்தில் கொடுத்தது போல உள்ளது.
-ஜெ.சுகுமார்