அஞ்சலக சிறுசேமிப்பு திட்டத்தில் சேர்ந்து பயன்பெறுங்கள் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுரை

உலக சிக்கன நாள் தினத்தையொட்டி தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

மக்களிடையே சிக்கனம் மற்றும் சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்திடும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30-ம் நாள் உலக சிக்கன நாளாக கொண்டாடப்படுகிறது. எதிர்கால வாழ்க்கை ஒளிமயமாக திகழ்ந்திட பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சிறு வயதிலிருந்தே சேமிப்பின் அவசியம் குறித்து எடுத்துரைத்து, சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும்.

‘சிறு துளி பெரு வெள்ளம்’ என்பதற்கேற்ப மக்கள் தாங்கள் ஈட்டிய பணத்தை, அஞ்சலகச் சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம், சிறுகச் சிறுக சேமிக்கப்படும் அத்தொகை பன்மடங்காகப் பெருகி, எதிர்கால வாழ்க்கைக்கு பாதுகாப்பை அளிக்கும். தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வு வளம்பெற, அஞ்சலகங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் சிறுசேமிப்பு திட்டங்களில் சேர்ந்து பயன்பெற்றிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

தேவையற்ற செலவுகளை தவிர்த்து சிக்கன நடவடிக்கையை கடைபிடித்து, சிக்கனமாக வாழ்ந்து, வீட்டுக்கும், நாட்டுக்கும் பெருமை சேர்ப்பதையே இந்த உலக சிக்கன நாள் வலியுறுத்துகிறது.

மக்கள் கடின உழைப்பின் மூலம் ஈட்டிய தங்களது சேமிப்பு தொகையை பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்தால்தான், அவர்களுக்கு தேவைப்படும் நேரத்தில் அவ்வாறு முதலீடு செய்த பணத்தை தக்க தருணத்தில் திரும்ப பெற முடியும். தங்களின் எதிர்கால தேவைகளில் முக்கியமாக கருதப்படும் பிள்ளைகளின் படிப்பு, திருமணம் மற்றும் வீடுகட்டுதல் போன்ற அத்தியாவசிய செலவினங்கள் கடன் பெறாமல், தங்கள் சேமிப்பில் இருந்தே கவுரவமாக மேற்கொள்ள இயலும். எனவே தமிழக மக்கள் அனைவரும் அருகில் உள்ள அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களில் இன்றே முதலீடு செய்து பயன் பல பெற்றிட, இந்த உலக சிக்கன நாளில் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools