X

அஜித் பாடலை பாராட்டிய அமைச்சர் பாண்டியராஜன்

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் எத்திராஜ் கல்லூரியில் தமிழ் அகராதி விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. இதற்கு அமைச்சர் பாண்டியராஜன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், “அஜித் கதாநாயகனாக நடித்து வெளியான விஸ்வாசம் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கண்ணான கண்ணே’ பாடலின் மூலம், பாடலாசிரியர் தாமரை வழக்கொழிந்த தமிழ் சொற்களை மீட்டெடுத்துள்ளதாக” கூறி பாராட்டு தெரிவித்தார்.

அவர் பேசும்போது, ’பாடலாசிரியர் தாமரை ஒவ்வொரு பாட்டிலும் ஏதாவது ஒரு வழக்கொழிந்த தமிழ் வார்த்தைக்கு உயிர் கொடுக்கிறார். கண்ணான கண்ணே பாடல் கேட்டிருப்பீர்கள். அந்த பாடலின் இரண்டாவது வரியில் ‘புண்ணான நெஞ்சை பொன்னான கையால் பூப்போல நீவவா’ என்று வரிகள் அமைத்து வழக்கொழிந்த சொற்களை மீட்டெடுத்துள்ளார். தாமரை, வசீகரன், கலாபக்காதலன் போன்ற வழக்கொழிந்த நல்ல தமிழ்ச் சொற்களை ஒரு பிரபலமான ஊடகம் மூலமாக மீண்டும் மீட்டெடுத்து பிரபலப்படுத்தியுள்ளார்.

இன்றைய தலைமுறை இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ‘கெத்து’ என்னும் வார்த்தை சுத்தமான தமிழ் சொல். கெத்து என்ற சொல் ‘போலித் தனமான பெருமை’ என்பதை குறிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வார்த்தை இதே அர்த்தத்தில் சிலப்பதிகாரத்தில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. ‘வச்சி செய்வதாக’ கூறுவதும் தமிழ் சொல் தான்’.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.