X

அஜித் பவாருக்கு முலமைச்சர் பதவி கொடுக்க மாட்டோம் – தேவேந்திர பட்னாவிஸ் அறிவிப்பு

மகாராஷ்டிர அரசியலில் கடந்த 2-ந் தேதி நடந்த திடீர் திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் கூட்டணியை சேர்ந்த அஜித்பவார் உள்ளிட்ட மூத்த தலைவர்களும் சிவசேனா, பா.ஜனதா கூட்டணி அரசில் இணைந்தனர். அஜித்பவார் துணை முதல்-மந்திரியாகவும், 8 பேர் மந்திரிகளாகவும் பதவி ஏற்றனர். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரிதிவிராஜ் சவான், வருகிற ஆகஸ்ட் 10-ந் தேதிக்குள் ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரி பதவியில் இருந்து நீக்கப்பட்டு, அஜித்பவார் அந்த பதவியில் அமர்த்தப்படுவார் என தெரிவித்தார். இதுகுறித்து சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-

மகாயுதி கூட்டணியின் அங்கம் வகிக்கும் கட்சியின் தலைவர் என்ற முறையில் அஜித்பவார் மகாராஷ்டிரத்தின் முதல்-மந்திரியாக ஆகமாட்டார் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். தேசியவாத காங்கிரஸ் பிரிவை சேர்ந்தவர்களுடன் மகாயுதி கூட்டங்கள் நடந்தபோதே அஜித்பவாருக்கு முதல்-மந்திரி பதவி கிடைக்காது என்று தெளிவாக எடுத்து கூறப்பட்டு உள்ளது. ஏக்நாத் ஷிண்டே எப்போதும் போல முதல்-மந்திரியாக நீடிப்பார். இதில் எந்த மாற்றமும் ஏற்படாது. அதிகார பகிர்வு குறித்து அஜித்பவாருக்கு தெளிவாக கூறப்பட்டது. அதை அவர் ஏற்றுக்கொண்டதுடன், மகாராஷ்டிரத்தின் முதல்-மந்திரியை மாற்றுவது குறித்த பேச்சுக்கே இடம் இல்லை.

மகாயுதி கூட்டணி குறித்து மக்களை குழப்புவதை இவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். எங்கள் தலைவர்களுக்கு இடையே எந்த குழப்பம் இல்லை. ஆனால் தொண்டர்கள் குழம்பி உள்ளனர். முன்னாள் முதல்-மந்திரி பிரிதிவிராஜ் சவான் போன்றவர்கள் வதந்திகளை பரப்பி வருகின்றனர். ஆகஸ்ட் 10-ந் தேதிக்குள் ஏதாவது நடக்குமானால் அது மந்திரிசபை விரிவாக்கமாக இருக்கும். இதற்கு முதல்-மந்திரி அழைப்பு விடுப்பார். இவ்வாறு அவர் கூறினார். அஜித்பவாரின கூட்டணியில் இணைந்தது தனக்கு எந்தவகையிலும் அச்சுறுத்தல் இல்லை என ஏக்நாத் ஷிண்டே முன்பே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: tamil news