அஜித் பற்றி பேச யாருக்கும் தகுதியில்லை – நடிகர் ஆர்.கே.சுரேஷ் ஆவேசம்
தமிழ்நாட்டில் பிறந்து வெளிநாட்டில் வாழ்ந்தாலும் தயாரிப்பாளர் டத்தோ கணேஷ் தமிழ் மண் வாசம் மாறாமல் தனது படமான “மாயன்” இசை வெளியீட்டு விழாவில் கோலாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை என்று தமிழர்களின் பாரம்பரியம் மிக்க கலைகளை வைத்து கோலாகலமாக ஆரம்பமானது “மாயன்” இசை வெளியீட்டு விழா.
இவ்விழாவில் தயாரிப்பாளர் டத்தோ கணேஷ், இசையமைப்பாளர் ஜோன்ஸ், ஒளிப்பதிவாளர் அருண்பிரசாத், ஆடை வடிவமைப்பாளர் நிவேதா ஜோசப், விஎஃப் எக்ஸ் ரமேஷ் ஆச்சார்யா, நடிகர் ராஜசிம்ஹா, நடிகை ஸ்ரீரஞ்சனி, நடிகர் ஜான் விஜய், கதாநாயகன் வினோத் மோகன், நடிகை ரஞ்சனி நாச்சியார், ஆர்.கே.சுரேஷ், நடிகர் சாய் தீனா, ஜாகுவார் தங்கம், இயக்குனர் ராஜேஷ், இயக்குநர் பிரபு சாலமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் ஆர்.கே.சுரேஷ் பேசும்போது, ‘500 படங்களுக்கு மேல் வெளியாக முடியாமல் தவிக்கிறது தமிழ் சினிமா. பெரிய நடிகர்களின் படங்களை வெளியிடுவதற்கு முக்கியத்துவம் கொடுப்பது போல, நல்ல திரைப்படங்கள் தேர்ந்தெடுத்து வெளியிடுங்கள். ரஜினி, கமல், விஜய், அஜித் படங்களைத் தூக்கிப் பிடிக்க நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால், இப்படத்திற்கு பத்திரிகையாளர்கள் நீங்கள் தான் ஆதரவளிக்க வேண்டும்.
அஜித் பற்றி பேசுவதற்கு யாருக்கும் தகுதி கிடையாது. சினிமாவில் இருந்துகொண்டே இங்கு இருப்பவர்களைப் பற்றி தரகுறைவாக பேசி விமர்சிப்பது தவறு. இப்படம் வெற்றியடைந்தால் 1000 பேர் நன்மையடைவார்கள். இப்படத்தின் இயக்குனர் ராஜேஷ் ஒரு குட்டி ராஜமௌலி. இப்படத்தை அவர் பார்த்து விட்டு ராஜமௌலி பாராட்டியிருக்கிறார். பின்னணி இசையைப் பார்க்கும் போது இப்போதே இப்படத்தை பார்க்க வேண்டும் என்று ஆவலாக இருக்கிறது. கதாநாயகன் வினோத் மோகன் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மிக பெரிய இடத்திற்கு வருவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.