விஸ்வாசம் படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக எச்.வினோத் இயக்கத்தில் ‘பிங்க்’ படத்தின் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் தொடக்க விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. அதில் போனிகபூர் கலந்து கொண்டு பேசும்போது, அஜித்குமாருக்காக ‘பிங்க்’ படத்தை தேர்வு செய்தது ஏன்? என்பதற்கு விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:-
“இங்கிலீஷ் விங்கிலீஷ்” படத்தில் அஜித்குமாருடன் இணைந்து பணியாற்றிய போது, எங்கள் தயாரிப்பில் தமிழில் அவர் ஒரு படம் நடிக்க வேண்டும் என்று ஸ்ரீதேவி விரும்பினார். கடந்த ஆண்டு வரை நல்ல கதை கிடைக்கவில்லை. ‘பிங்க்’ படத்தை தமிழில் தயாரிக்கலாம் என்ற எண்ணத்தை அஜித் தெரிவித்தார். அஜித் அந்த படத்தில் நடித்தால், அதை ஒரு சிறந்த படமாக உருவாக்க முடியும் என்று ஸ்ரீதேவியும் அந்த எண்ணத்தை ஏற்றுக் கொண்டார்.
தமிழ் படம் தயாரிப்பதை நான் பெருமையாக கருதுகிறேன். ‘பிங்க்’ படத்தை தமிழில் எடுப்பதிலும், அஜித்துடன் இணைந்து பணிபுரிவதிலும் மகிழ்ச்சி அடைகிறேன். மே மாதம் 1-ந் தேதி படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறோம்.
இவ்வாறு போனி கபூர் கூறினார்.