‘அசுரன்’ படம் பார்த்து பாராட்டிய மு.க.ஸ்டாலின்
பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு வெற்றிமாறன் உருவாக்கிய படம் அசுரன். தனுஷ் நடித்த இப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருக்கிறார். இப்படத்தில் மஞ்சு வாரியர், அபிராமி, பசுபதி, பிரகாஷ் ராஜ், பாலாஜி சக்திவேல், கருணாஸ் மகன் கென், ‘ஆடுகளம்’ நரேன், டி.ஜே, பவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
அசுரன் படம் கடந்த அக்டோபர் 4ந் தேதி வெளியானது. தீண்டாமை உள்ளிட்ட அடக்குமுறைக்கு எதிராக பேசிய இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. அசுரன் படத்தை பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில், தூத்துக்குடியில் உள்ள திரையரங்கில் நேற்று இரவு அசுரன் படத்தை பார்த்து ரசித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: ”அசுரன்- படம் மட்டுமல்ல பாடம்! பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும், சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்! கதைகளம், வசனம் என வென்று காட்டியிருக்கும் வெற்றிமாறனுக்கும், வாழ்ந்து காட்டியிருக்கும் தனுஷூக்கும் பாராட்டுகள்” என பதிவிட்டுள்ளார்.