X

அசாம் உல்பா குழுவுடன் மத்திய, மாநில அரசுகள் அமைதி ஒப்பந்தம்

வடகிழக்கு மாநிலமான அசாமில் செயல்பட்டு வரும் ஆயுதம் ஏந்திய கிளர்ச்சிக்குழு அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி. ‘உல்பா’ என்று அழைக்கப்படும் இந்த அமைப்பு 1979-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பழங்குடி அசாமிய மக்களுக்காக தனிநாடு கோரி வன்முறைகளில் ஈடுபட்டு வந்த இந்த அமைப்பு கடந்த 1990-ம் ஆண்டு மத்திய அரசால் தடை செய்யப்பட்டது.

இந்த சூழலில் அசாமில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கில், மத்திய, மாநில அரசுகள் மாநிலத்தில் செயல்பட்டு வரும் கிளர்ச்சி குழுக்களுடன் அமைதி பேச்சுவார்த்தையில் இறங்கியது. இதன் பலனாக பல்வேறு அமைப்புகள் அரசுடன் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டது.

அந்த வகையில் உல்பா அமைப்புடனும் மத்திய, மாநில அரசுகள் கடந்த 12 ஆண்டுகளாக நிபந்தனையற்ற பேச்சுவார்த்தையை நடத்தி வந்தன. அரபிந்தா ராஜ்கோவா தலைமையிலான உல்பாவின் ஒரு பிரிவு இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது.

இந்த நிலையில் உல்பா அமைப்பு மற்றும் மத்திய, மாநில அரசுகள் இடையேயான முத்தரப்பு பேச்சுவார்த்தை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா, உல்பா பிரதிநிதிகள் இதில் பங்கேற்றேனர். பேச்சுவார்த்தையின் முடிவில் அரபிந்தா ராஜ்கோவா தலைமையிலான உல்பா பிரிவுடன் மத்திய, மாநில அரசுகள் சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திட்டன.

இதுகுறித்து அமித்ஷா கூறியதாவது:-

உல்பாவின் வன்முறையால் அசாம் நீண்ட காலமாக பாதிக்கப்பட்டுள்ளது. வன்முறையில் சுமார் 10,000 பேர் உயிரிழந்துள்ளனர். அசாமின் மிக பழமையான கிளர்ச்சிக் குழுவான ‘உல்பா’, வன்முறையைக் கைவிடவும், அமைப்பை கலைக்கவும், ஜனநாயக செயல்பாட்டில் சேரவும் ஒப்புக்கொண்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அசாமுக்கு ஒரு பெரிய வளர்ச்சித் தொகுப்பு வழங்கப்படும். ஒப்பந்தத்தின் ஒவ்வொரு அம்சமும் முழுமையாக அமல்படுத்தப்படும்.

இவ்வாறு அமித்ஷா கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரின் வழிகாட்டுதல் மற்றும் தலைமையின் கீழ் கையெழுத்தான இந்த ஒப்பந்தம் ஒரு வரலாற்று சாதனை என முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா குறிப்பிட்டார்.

Tags: tamil news