X

அசாமில் குழந்தை கடத்த வந்தவர் என நினைத்து வாலிபரை கொடூரமாக தாக்கிய மக்கள்

மராட்டிய மாநிலத்தில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு குழந்தை கடத்தும் கும்பலை சேர்ந்தவர்கள் என நினைத்து 4 சாமியார்களை கிராம மக்கள் கொடூரமாக தாக்கினார்கள். இதேபோன்று அசாம் மாநிலத்திலும் வாலிபர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அங்குள்ள கல்சார் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் தனது காரில் சென்றார். பின்னர் அவர் அங்கு ஒரு இடத்தில் நின்று கொண்டு இருந்தார். அவர் குழந்தையை கடத்த வந்திருப்பதாக அப்பகுதியில் வதந்தி பரவியது. இதனால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள் அவரை கண்மூடித்தனமாக தாக்கினார்கள்.

அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்ற அந்த வாலிபரை கீழே தள்ளி கொடூரமாக தாக்கினார்கள். இதில் அவர் படுகாயம் அடைந்தார். மேலும் அவர் வந்த காரையும் அடித்து நொறுக்கி தீ வைத்தனர். இது பற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபற்றி உயர் போலீஸ் அதிகாரி நுமல் மகாட்டா கூறும்போது வதந்தியை யாரும் நம்பாதீர்கள், யாராவது சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்தால் உடனே போலீசாருக்கு தகவல் கொடுக்க வேண்டும் சட்டத்தை யாரும் கையில் எடுக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.