அக்னி 2 ஏவுகனை சோதனை வெற்றி!
ஒடிசா மாநிலத்தின் பாலசோர் நகரில் கடலோர பகுதியில் இந்தியாவின் அக்னி 2 ரக ஏவுகணை பரிசோதனை நேற்று நடைபெற்றது. இந்த ஏவுகணை 2 ஆயிரம் கி.மீ. தொலைவு கொண்ட இலக்கையும் தாக்கி அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இரவு நேரத்தில் நடந்த இந்த ஏவுகணை பரிசோதனையானது வெற்றியடைந்து உள்ளது என அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அக்னி 2 ஏவுகணை முதல்முறையாக கடந்த 1999, ஏப்ரல் 11-ம் தேதி விண்ணில் ஏவி பரிசோதனை செய்யப்பட்டது.
அக்னி ஏவுகணை வரிசையில் 700 கி.மீ. தொலைவை தாக்கும் அக்னி 1 ஏவுகணை, 3 ஆயிரம் கி.மீ. தொலைவை சென்றடைந்து தாக்கும் அக்னி 3 ஏவுகணை மற்றும் நீண்ட தொலைவு சென்று இலக்கை தாக்கி அழிக்கும் அக்னி 4 மற்றும் அக்னி 5 ஏவுகணைகள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.