அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெறும் – ராகுல் காந்தி பேச்சு

ராணுவத்தில் 4 ஆண்டுகளுக்கு இளைஞர்களை ஒப்பந்த அடிப்படையில் சேர்ப்பதற்கு அக்னிபாத் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கு வட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் காங்கிரஸ் நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி சந்தித்துப் பேசினார். அதன்பின் ராகுல் காந்தி பேசியதாவது:

நாட்டில் மிகப்பெரிய பிரச்னையாக வேலைவாய்ப்பு உருவாகி உள்ளது. ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய பணிகளில் சேர வேண்டும் என்று கனவோடு தன்னை தயார்படுத்தி கொண்டு வந்த இளைஞர்களின் கனவை மத்திய அரசு உடைத்துள்ளது.

மத்திய அரசு முதலில் ஒரே பதவி மற்றும் ஒரே ஓய்வூதியம் குறித்துப் பேசி வந்தனர். தற்போது பதவியும் இல்லை. ஓய்வூதியமும் இல்லை என்று அறிவித்துள்ளது. ராணுவத்தின் பலத்தை அதிகப்படுத்துவதை விட்டுவிட்டு மத்திய அரசு அதனை பலவீனப்படுத்தி வருகிறது.

வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற்றுக் கொள்ளும் என நான் கூறினேன். அதேபோல் மத்திய அரசு வேளாண் சட்டத்தை திரும்ப பெற்றது. அதைபோல அக்னிபாத் திட்டத்தையும் மத்திய அரசு திரும்ப பெறும்.

இவ்வாறு பேசினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools