அக்டோபர் 3ம் வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் தென்மேற்கு பருவமழை விலகுவதற்கான இறுதி கட்டத்தில் தற்போது இருக்கிறது. அதனைத்தொடர்ந்து தென் இந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உருவாகும். இந்தநிலையில் இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் என்.புவியரசன் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) நீலகிரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், தேனி, திண்டுக்கல், கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
ராஜஸ்தானில் தென்மேற்கு பருவமழை விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறது. இன்னும் 2 அல்லது 3 நாட்களில் அதை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். தென் இந்திய பகுதிகளில் தென்மேற்கு பருவமழை விலக 10 நாட்களுக்கு மேல் ஆகும்.
தென்மேற்கு பருவமழை விலகிய பிறகே, வடகிழக்கு பருவமழை தொடங்கும். அந்த வகையில் தமிழகம் அதிக மழையை பெறக்கூடிய வடகிழக்கு பருவமழை காலம் வழக்கமாக தொடங்கக்கூடிய அக்டோபர் 3-வது வாரத்தில் தொடங்க வாய்ப்பு இருக்கிறது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பான அளவு அல்லது இயல்பை ஒட்டிய அளவில் இருக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், ‘சத்தியமங்கலம் 8 செ.மீ., சித்தார் 7 செ.மீ., பேச்சிப்பாறை, எமரால்ட் தலா 5 செ.மீ., பரங்கிப்பேட்டை, தீர்த்தாண்டதானம் தலா 4 செ.மீ., அண்ணா பல்கலைக்கழகம், சத்தியபாமா பல்கலைக்கழகம், புழல், பொள்ளாச்சி, திருக்கோவிலூர், திருபுவனம், பெரியாறு, ஊத்துக்குளி தலா 3 செ.மீ. உள்பட சில இடங்களில் மழை பெய்திருக்கிறது.