அக்டோபர் மாதம் சீனாவுக்கு செல்லும் ரஷ்ய அதிபர் புதின்

ரஷிய அதிபரான புதின் அக்டோபர் மாதம் சீனாவிற்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக, அவருடைய வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் யுரி யுஷாகோவ் உறுதிப்படுத்தியுள்ளார். ‘ஒன் பெல்ட் ஒன் ரோடு’ மாநாட்டின் இணைந்த ஒரு பகுதியாக இந்த பயணம் இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

‘ஒன் பெல்ட், ஒன் ரோடு’ ஆசியாவை ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுடன் இணைக்கும் கட்டமைப்பு திட்டங்களை உள்ளடக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது. சீனா பயணத்தை தொடர்ந்து துருக்கியும் செல்ல இருக்கிறார். அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் ஒரு பகுதியாக இந்த பயணம் இருக்கும் என யுஷாகோவ் தெரிவித்துள்ளார். துருக்கி ரஷியாவுக்கு ஆதரவு நாடாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடைபெற இருக்கும் 20ஜி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக புதினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தியா பயணத்தை அவர் தவிர்ப்பதாக இதுவரை தெரிவிக்காத நிலையில், பயணம் செய்வாரா? என்பது குறித்து இன்னும் உறுதியாக முடிவு எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

தென்ஆப்பிரிக்காவில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ள விடுக்கப்பட்ட அழைப்பை புதின் நிராகரித்துள்ளார். அவருக்கு எதிராக சர்வதேச கிரிமினல் கோர்ட் கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது. உக்ரைனில் இருந்து குழந்தைகள் கடத்தப்பட்டதற்கு புதின் தனிப்பொறுப்பு என குற்றம்சாட்டி சர்வதேச கிரிமினல் கோர்ட் அந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

சர்வதேச கிரிமினல் கோர்ட் ஒப்பந்தத்தில் தென்ஆப்பிரிக்கா கையெழுத்திட்டுள்ளதால், அங்கு சென்றால் கைது செய்யப்படும் நிலை ஏற்படும். இதனால் புதின் தென்ஆப்பிரிக்கா செல்லவில்லை. சீனா, துருக்கி, இந்தியா அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. இதனால் சீனா, துருக்கி செல்ல புதினுக்கு சிக்கல் ஏதும் இல்லை.

சீன அதிபர் சில மாதங்களுக்கு முன் மாஸ்கோ சென்றிருந்தார். சீன அதிபர் ஜி ஜின்பிங்- புதின் சந்திப்பு 2022-ம் ஆண்டு உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற மாநாட்டின்போது நடைபெற்றது. அதேபோல் 2022-ம் ஆண்டு பீஜிங்கில் நடைபெற்ற குளிர்கால விளையாட்டு தொடக்கவிழாவின் போது சந்தித்துக் கொண்டனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news