‘அக்கா குருவி’ போன்ற படங்கள் வர வேண்டும் – இளையராஜா பாராட்டு
இயக்குனர் சாமி இயக்கத்தில் உருவாகியுள்ள குழந்தைகள் திரைப்படம் ‘அக்காகுருவி’. இளையராஜா இசையில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை, பி.வி.ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் மே 6-ந் தேதி
தமிழகமெங்கும் வெளியிடுகிறது.
படம் குறித்து இளையராஜா கூறியதாவது, சாதாரணமான நாட்களில் நான் உலக சினிமாக்கள் பார்ப்பது வழக்கம், நான் இசையமைக்கும் சினிமாவை பார்ப்பதோடு சரி, மற்ற சினிமாக்களை
அவ்வளவாக பார்க்க நேரம் கிடைப்பதில்லை. உலக சினிமாக்களை பார்ப்பதில் எனக்கு ஆர்வம் இருக்கும். அப்படி சில்ட் ரன் ஆப் ஹெவன் படம் பார்த்த போது மிக ஆச்சர்யமாக இருந்தது. ஒரு சிறு
ஷூவை வைத்து கொண்டு, சிறு குழந்தைகளின் உலகத்தை ஒரு சின்ன பிரச்சினையை அவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதை மிக தத்ரூபமாக, இப்படி ஒரு அற்புதமான சினிமாவாக
தந்துள்ளார்களே என ஆச்சர்யமாக இருந்தது. நம் தமிழ்நாட்டில் ஏன் இப்படி படங்கள் எடுப்பதில்லை, ஏன் வருவதில்லை என வருத்தமாக இருந்தது.
ஒரு கலைஞனுக்கு உயர்வான சிந்தனை தோன்றினால் தான் அவனை அது தாக்கினால் தான். இவன் உயர்வான ஒன்றை உருவாக்க முடியும். இப்படி படம் எடுக்க முடியும். அது நம் இயக்குனர்களிடம்
இல்லை. ஆனால் நம்ம இயக்குனர் சாமி அதே படத்தை, நம்ம ஊரில் எடுத்தால் எப்படி இருக்கும் என நம்ம ஊருக்கு தகுந்தவாறு அந்த கதையை மாற்றி, ஒரிஜினல் படத்தை விட சுவாரஸ்யமாக
அருமையாக எடுத்திருக்கிறார். இந்த மாதிரி புது இயக்குனர்கள் வர வேண்டும் என்றும் அவர்களுக்கு இசையமைப்பதற்கும் காரணம் அது தான். மணிரத்னம் முதல் படத்திற்கு இசையமைத்த
காரணம் அது தான். நல்ல படைப்புகள் வர வேண்டும். இந்தப்படங்களை பொதுமக்கள் ஊக்குவிக்க வேண்டும். இது மாதிரி படங்கள் ஜெயிக்க வேண்டும். மக்களின் ரசனை வளர வேண்டும் என்று
கூறினார் இளையராஜா.