X

அகில இந்திய ஹாக்கி போட்டி – சென்னையில் நாளை தொடங்குகிறது

எம்.சி.சி.- முருகப்பா தங்கக் கோப்பைக்கான 94-வது அகில இந்திய ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. அடுத்த மாதம் 3-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன், இந்திய கடற்படை, இந்திய ரெயில்வே, ஹாக்கி கர்நாடகா, மத்திய தலைமை செயலகம், ‘பி’ பிரிவில் பஞ்சாப் நேஷனல் வங்கி, இந்திய ராணுவம், இந்திய விமானப்படை, தமிழ்நாடு ஹாக்கி யூனிட், இந்திய தணிக்கை துறை அலுவலகம் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். தொடக்க நாளில் இரு ஆட்டங்கள் நடக்கின்றன. தமிழ்நாடு-தணிக்கை துறை அலுவலகம் (மாலை 4.15 மணி), இந்திய ரெயில்வே- மத்திய தலைமை செயலகம் (மாலை 6 மணி) அணிகள் மோதுகின்றன.

4 ஆண்டுக்கு பிறகு நடக்க உள்ள இந்த போட்டியில் சாம்பியன் கோப்பையை வெல்லும் அணி ரூ.7 லட்சமும், 2-வது இடத்தை பிடிக்கும் அணி ரூ.5 லட்சமும் பரிசுத்தொகையாக பெறும். அரைஇறுதியில் தோற்கும் அணிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் கிடைக்கும் இது தவிர சிறந்த வீரர், சிறந்த முன்கள வீரர், சிறந்த கோல் கீப்பர் மற்றும் பின்கள வீரர், இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருது வெல்பவர், தொடர்நாயகன் ஆகியோருக்கு உயர்ரக சைக்கிளுடன், தலா ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசும் வழங்கப்படும்.

இந்த தகவலை சென்னையில் நேற்று எம்.சி.சி. தலைவர் விஜய்குமார், முருகப்பா குழும நிர்வாகி அருண் முருகப்பன் ஆகியோர் நிருபர்களிடம் தெரிவித்தனர். அவர்கள் மேலும் கூறுகையில், ‘கொரோனா பெருந்தோற்று காரணமாக 4 ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்த போட்டியை நடத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம். நாட்டில் உள்ள முன்னணி அணிகளின் அற்புதமான ஆட்டத்தை நாங்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளோம்.

இந்த ஆண்டு பரிசுத்தொகை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டிகள் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்தன. ஹாக்கி போன்ற விளையாட்டுகளை ஊக்குவிப்பதில் தமிழக அரசு கவனம் செலுத்துவது பாராட்டுக்குரியது. இந்த போட்டியை பார்க்க அதிக அளவில் ரசிகர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்’ என்று கூறினர்.

Tags: tamil sports