அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பாராளுமன்றத் தேர்தலையொட்டி அனைத்து மாநிலங்களுக்கும் சென்று காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து வருகிறார்.
அந்த வகையில் வருகிற 13-ந் தேதி (செவ்வாய்) சென்னை வருகிறார். சென்னையில் நடைபெறும் பிரமாண்ட காங்கிரஸ் கூட்டத்தில் பேசுகிறார். இதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, வட்டார மற்றும் பூத் கமிட்டிகள் வரையிலான நிர்வாகிகள் அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் மத்தியில் உரையாற்றும் கார்கே தேர்தலுக்காக காங்கிரசாரை முடுக்கி விடுவார் என்று கூறப்படுகிறது.
சென்னை வரும் கார்கே தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினையும் சந்தித்து பேசவிருப்பதாக கூறப்படுகிறது. தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க.வுடன் முதல்கட்டமாக பேசி உள்ளது. கூட்டணியில் இடம் பெற்றுள்ள மற்ற கட்சிகளுடன் பேசிய பிறகு மீண்டும் காங்கிரஸ்-தி.மு.க. பேச்சுவார்த்தை நடைபெறும்.
கார்கே வருவதற்குள் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டால் கார்கே முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.