வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு திமுக ஆதரவு – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்திய பாஜக அரசின் தொழிலாளர் விரோதச் சட்டங்களை எதிர்த்து இந்தியத் தொழிற்சங்க மையங்களின் சார்பில் வருகின்ற 26.11.2020 அன்று நடத்தப்பட இருக்கும் மாபெரும் பொது வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு திமுகவின் சார்பில் முழுமையான ஆதரவினையும் ஒத்துழைப்பினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதலாளிகளை மட்டுமே மனதில் கொண்டு, அவர்கள் மேலும் மேலும் கொழிக்கும்படி வளர்க்கவும், முழு நேரமும் பாடுபடும் தொழிலாளர்களைத் தொடர்ந்து வஞ்சிக்கவுமான செயலில் மத்தியில் அமைந்துள்ள பாஜக அரசு ஈடுபட்டு, ஏற்கெனவே தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு இருந்த 44 தொழிலாளர் சட்டங்களுள், 15 சட்டங்களை ரத்து செய்து விட்டது. மீதியுள்ள 29 சட்டங்களை 4 தொகுப்புகளாக்கி, தொழிலாளர் உரிமை, நலன், பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்தையும் திட்டமிட்டு பறித்து விட்டது.

பல நூற்றாண்டு காலமாக போராடி பெற்ற உரிமைகளை, தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டங்களை எல்லாம் ரத்து செய்யும் முன்பு, பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதங்கள் ஏதும் ஆக்கப்பூர்வமாக நடைபெறவில்லை. அந்த சட்டங்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் முன்வைக்கப்பட்ட திருத்தங்களையும் ஏற்கவில்லை. ஏன், எதிர்க்கட்சிகள் அவையில் இல்லாத நேரத்திலேயே இந்தச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன என்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பாழ்படுத்தும் போக்காகும்!

தொழிலாளர் நலத் திட்டங்களை நிறைவேற்றி, என்றைக்கும் அவர்கள் பின்னால் ஆதரவளித்து நிற்கும் திமுகவின் சார்பிலும், திமுகவின் தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவையின் சார்பிலும், நாடாளுமன்றம் மற்றும் வெளி அரங்கில் இந்தச் சட்டத் தொகுப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், பெரும்பான்மை இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக, அதைத் துஷ்பிரயோகம் செய்து, தொழிலாளர்களுக்கு மாறாத துரோகம் செய்து விட்டது மத்திய பாஜக அரசு. அந்த துரோகத்திற்கு இங்குள்ள எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான அதிமுக அரசும் சிறிதும் கருணையில்லாமல் கைகொடுத்து நிற்கிறது.

‘பணியிடப் பாதுகாப்பு நல்வாழ்வு மற்றும் பணியிடச் சூழல்கள் சட்டத் தொகுப்பு’, ‘சமூகப் பாதுகாப்புச் சட்டத் தொகுப்பு’, ‘இந்தியத் தொழில் உறவுச்சட்டத் தொகுப்பு’, ‘ஊதியச் சட்டத் தொகுப்புச் சட்டம்’ என நான்கு தொகுப்புச் சட்டங்களும் தொழிலாளர்களின் மதிப்புமிக்க உரிமைகளுக்குக் குந்தகம் விளைவித்துள்ளது.

இது தவிர விவசாயிகளைப் பாதிக்கும் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு, புதிய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தொழிலாளர் விரோத, மக்கள் விரோத மத்திய பாஜக அரசின் சட்டங்களை, நடவடிக்கைகளைக் கண்டித்து அறிவிக்கப்பட்டுள்ள இந்த மாபெரும் பொது வேலை நிறுத்தம் மிக முக்கியமான தருணத்தில் நடைபெறுகிறது.

ஆட்குறைப்பு, சம்பளக் குறைப்பு, கூலிக் குறைப்பு, தொழிற்சங்க உரிமை பறிப்பு, தொழிற்சங்க அங்கீகாரத்தைச் சிதைப்பது, நிலையான சட்டங்களைப் பிசுபிசுக்க வைப்பது, தொழில் தகராறு தீர்க்க ஒற்றைத் தீர்ப்பாயம் எனக் கூறி மாவட்ட நீதிமன்றங்களை ஒழித்துக் கட்டுவது, குறைந்தபட்ச ஊதியத்திற்கு ஆபத்து ஏற்படுத்துவது, குழந்தைத் தொழிலாளரை அனுமதித்து குலக்கல்வித் திட்டத்தைப் புகுத்துவது, அபாயகரமான தொழில்கள் உள்ள நிறுவனங்களில் எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி பெண்களைப் பணியில் ஈடுபட வைப்பது என இந்த நான்கு சட்டத் தொகுப்புகள் தொழிலாளர் வர்க்கத்தின் மீது தொடுக்கப்பட்ட பாஜக அரசின் வறட்டுப் போர்ப்பிரகடனமாக இருக்கிறது.

தொழிலாளர்களுக்கு எதிராகவும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாகவும் செயல்படும் இந்த மத்திய பாஜக அரசினை எதிர்த்து, தொழிற்சங்கங்களின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள போர்ப் பிரகடனம் உள்ளபடியே மத்திய பாஜக அரசைத் தற்போது கதி கலங்க வைத்துக் கொண்டிருக்கிறது.

ஆகவே, இந்தப் பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவளிக்கும் திமுகவின் சார்பில் நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், இதை ஏதோ தொழிற்சங்கங்கள் மட்டும் எதிர்க்க வேண்டிய சட்டங்கள் என்று கருதிவிடாமல், தொழிலாளர் நலனில் ஆர்வமும் அக்கறையும் உள்ள அனைத்துக் கட்சிகளும், அமைப்புகளும் ஒரே அணியில் நின்று ஒரு முகமாகப் போராடிட முன்வர வேண்டும் என்றும், 26-ம் தேதி நடைபெறும் மாபெரும் வேலைநிறுத்தத்தின் போர்ப் பிரகடனப் பேரெழுச்சி டெல்லி செங்கோட்டையில் எதிரொலிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

வீழ்வது மத்திய பாஜக அரசின் தொழிலாளர் விரோதப் போக்காக இருக்கட்டும்; வெல்வது தொழிலாளர்களின் ஒற்றுமையாக இருக்கட்டும்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.