Tamilசெய்திகள்

வேலூர் தொகுதி பாராளுமன்ற தேர்தல் – தலைவர்கள் பிரசாரம்

அ.தி.மு.க. கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தி.மு.க. சார்பில் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உள்பட 28 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மும்முனை போட்டி இருந்தாலும் அ.தி.மு.க., தி.மு.க. இடையே தான் போட்டி உள்ளது.

தேர்தல் பிரசாரம் 3-ந்தேதி சனிக்கிழமை மாலை 6 மணியுடன் ஓய்கிறது. பிரசாரத்துக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளதால் தலைவர்கள் பிரசாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

அ.தி.மு.க., தி.மு.க. சார்பில் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான தொண்டர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தொண்டர்கள் குவிந்துள்ளதால் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் திருவிழாவை போல் கூட்டம் காணப்படுகிறது.

அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக அமைச்சர்கள் தொகுதி வாரியாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு ஆதரவாக, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் வீடு, வீடாக சென்று ஓட்டு கேட்டு வருகின்றனர்.

அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்றும், நாளையும் பிரசாரம் செய்கிறார். அதேபோல், தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் இன்று தொடங்கி 3 நாட்கள் தொடர்ந்து பிரசாரம் செய்கிறார்.

இருவரும் ஒரே நேரத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவதால் பிரசாரம் களம் சூடுபிடித்துள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு நாளைக்கு 2 தொகுதிகள் வீதமும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஒரு நளைக்கு ஒரு தொகுதி என்றும் பிரசாரம் மேற்கொள்கின்றனர்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை 5 மணிக்கு வாணியம்பாடி பஸ் நிலையத்தில் பேசுகிறார். அதைத் தொடர்ந்து 6 மணிக்கு ஆம்பூர் பஸ் நிலையத்தில் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார்.

நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு கே.வி.குப்பம் பஸ் நிலையம், 6 மணிக்கு குடியாத்தம் பஸ் நிலையத்தில் பிரசாரம் செய்கிறார். அதைத் தொடர்ந்து 2-ந்தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு அணைக்கட்டிலும், 6 மணிக்கு வேலூரிலும் பிரசாரம் செய்கிறார்.

முதல்-அமைச்சர் பிரசாரம் மேற்கொள்ள உள்ள இடங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வடக்கு மண்டல ஜ.ஜி. நாகராஜன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். பாதுகாப்பு பணியில் 1500-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் இன்று பிரசாத்தை ஆரம்பித்து விட்டார். காலை வேலூர் டோல்கேட் உழவர் சந்தையில் பொதுமக்களிடம் ஓட்டு கேட்டார்.

இன்று மாலை 4 மணிக்கு கே.வி.குப்பம் தொகுதிக்கு உட்பட்ட லத்தேரி, செஞ்சி, பனமடங்கி, பரதராமி, சித்தூர் கேட், கொண்ட சமுத்திரம், கீழ்ஆலத்தூர், கே.வி.குப்பம், மேல்மாயில், வடுகந்தாங்கல் பகுதியில் வாசன் பிரசாரம் செய்கிறார்.

நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செக்குமேடு, மிட்டூர், நிம்மியம்பட்டு, வாணியம்பாடி, பெருமாள்பேட்டை, வாணியம்பாடி பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.

நாளை மறுநாள் திங்கட்கிழமை அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேலப்பாடி, வண்டிபாலத்தெரு, அல்லாபுரம், பலவன் சாத், தொரப்பாடி, சித்தேரி, பொன்னாத்தூர், தொரப்பாடி, பொற் கோவில், ஊசூர் (தெள்ளூர்), அணைக்கட்டு, குருராஜ பாளையம், ஒடுக்கத்தூர், மாதனூர், பள்ளிகொண்டா உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.

வேலூர் குடியாத்தம், ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மீண்டும் பிரசாரம் செய்ய வருகிறார்.

துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 29-ந்தேதி திங்கட்கிழமை அணைக்கட்டு தொகுதிக்குட்பட்ட ஒடுகத்தூரில் மாலை 4 மணிக்கு பிரசாரத்தை தொடங்குகிறார். கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதி லத்தேரியில் 6 மணிக்கு பிரசாரம் செய்கிறார்.

குடியாத்தம் சட்ட மன்ற தொகுதி பேரணாம்பட் டில் 30-ந்தேதி செவ்வாய்க் கிழமை மாலை 4 மணிக்கும், வேலூரில் 6 மணிக்கு பேசுகிறார்.

1-ந்தேதி வியாழக்கிழமை வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி ஆலங்காயத்தில் மாலை 4 மணிக்கும், ஆம்பூரில் மாலை 6 மணிக்கு பேசுகிறார். அவர் 3 நாட்கள் பிரசாரம் செய்கிறார்.

கனிமொழி எம்.பி., 30-ந் தேதி வேலூரில் பேசுகிறார். 31-ந்தேதி வாணியம்பாடி, குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில பிரசாரம் செய்கிறார்.

உதயநிதி ஸ்டாலின் 29-ந்தேதி வாணியம்பாடி, ஆம்பூர் சட்டமன்ற தொகுதியிலும் 30-ந்தேதி குடியாத்தம், கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதிகளில் ஒட்டு சேகரித்து பேசுகிறார். 31-ந் தேதி அணைக்கட்டு, வேலூ ரில் பிரசாரம் செய்கிறார்.

திண்டுக்கல் ஐ.லியோனி 30-ந்தேதி குடியாத்தம், பேரணாம்பட்டிலும், 31-ந் தேதி கே.வி.குப்பம், வாணியம்பாடியிலும், 1-ந் தேதி அணைக்கட்டு, வேலூரில் பிரசாரம் செய்கிறார்.

இவர்கள் தவிர அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து கூட்டணி கட்சி தலைவர்களும் பிரசாரம் செய்கின்றனர். நாளை ஞாயிற்றுக்கிழமை அணைக்கட்டு தொகுதியில் அன்புமணி பிரசாரம் செய்கிறார்.

தே.மு.தி.க. பிரேமலதா 31-ந்தேதி வாணியம்பாடியில் தொடங்கி ஆம்பூர், பேரணாம்பட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம், வேலூரில் பிரசாரம் செய்கிறார்.

பா.ஜனதா சார்பில் தமிழிசை சவுந்தரராஜன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், நடிகர் சரத்குமார், புதிய தமிழக கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பிரசாரம் செய்ய வருகின்றனர். அவர்கள் வருகிற தேதி இன்னும் உறுதி செய்யப்பட வில்லை.

இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா எம்.பி. வருகிற 30-ந்தேதி மாலை ஆம்பூரில் நடைபெறும் மாபெரும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர், தேசியக்குழு உறுப்பினர், விடுதலை போராட்ட வீரர் ஆர்.நல்லகண்ணு 31-ந்தேதி வேலூரில் நடைபெறும் மாபெரும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், தேசியக்குழு உறுப்பினர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தா.பாண்டியன் வருகிற ஆகஸ்டு 1-ந்தேதி மாலை வாணியம்பாடியில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு திரட்டுகிறார்.

மாநில செயலாளர் முத்தரசன் வரும் 26-ந்தேதி மாலை 4 மணி முதல் மேல்பட்டி, பேரணாம்பட்டு, குடியாத்தம், லத்தேரி மற்றும் கே.வி.குப்பம் ஆகிய பகுதிகளில் வேன் மூலம் பிரசாரம் செய்கிறார்.

காங்கிரஸ் சார்பில் அகில இந்திய செயலாளர் ஸ்ரீவல்லபிரசாத் 30-ந்தேதி பிரசாரம் செய்ய வருகிறார்.

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் 23-ந்தேதி வேலூரில் பிரசாரம் செய்தார். அவர் மீண்டும் நாளை முதல் தொகுதி முழுவதும் பிரசாரம் செய்கிறார்.

வேலூர் தேர்தல் பிரசாரத்திற்கு அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் ஒரே நேரத்தில் முற்றுகையிட்டுள்ளதால் வேலூர் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *