வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட்டுடன் சக வீரர்கள் கருத்து வேறுபாடு? – கிரிக்கெட் வாரியம் விளக்கம்

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் 20 ஓவர் அணிக்கு பொல்லார்ட் கேப்டனாக உள்ளார். தற்போது இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரில் வெஸ்ட் இண்டீஸ் விளையாடி வருகிறது.

இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட்டுக்கும் மற்ற வீரர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது.

இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியில் வீரர்கள் இடையே பிளவு இல்லை என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்து உள்ளது.

இது குறித்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சமூக வலைதளங்களிலும் பிராந்திய ஒளிபரப்பு ஊடகங்களிலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்குள் பிளவு இருப்பதாக வெளியான தகவல் குறித்து கிரிக்கெட் வாரியம் அறிந்துள்ளது. இது ஆதாரமற்ற மற்றும் குறும்புத்தமான குற்றச்சாட்டுகள் ஆகும். அணி கேப்டனுக்கும் மற்ற வீரர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு இல்லை என்பதில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் திருப்தி அடைகிறது என்று தெரிவித்துள்ளது.

மேலும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரிய தலைவர் ரிக்கி ஸ்கெரிட் கூறும் போது, எங்கள் அணிக்குள் பிளவுகளை விதைக்க வதந்திகள் பரப்பப்பட்டுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் கேப்டனில் நம்பகத் தன்மையின் மீதான தீங்கிழைக்கும் தாக்குதலாக இதை நான் பார்க்கிறேன் என்று தெரிவித்தார்.