Tamilவிளையாட்டு

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 3 வது ஒரு போட்டி – இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கட்டாக் நகரில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் தீபக் சாஹருக்குப் பதிலாக நவ்தீப் சைனி சேர்க்கப்பட்டார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிகளின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான பூரன் 64 பந்தில் 10 பவுண்டரி, 3 சிக்சருடன் 89 ரன்களும், கேப்டன் பொல்லார்டு ஆட்டமிழக்காமல் 51 பந்தில் 3 பவுண்டரி, 7 சிக்சர்களுடன் 74 ரன்களும் விளாச வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 315 ரன்கள் குவித்தது.

இந்திய அணி சார்பில் நவ்தீப் சைனி 2 விக்கெட்டும் சர்துல் தாகூர், முகமது ஷமி, ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 316 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இதனால் இந்தியாவின் ஸ்கோர் சீராக சென்று கொண்டிருந்தது.

49 பந்தில் 50 ரன்னைத் தொட்ட இந்தியா, 96 பந்தில் 100 ரன்னைத் தொட்டது. லோகேஷ் ராகுல் 49 பந்திலும், ரோகித் சர்மா 52 பந்தில் அரைசதம் அடித்தனர்.

இந்தியாவின் ஸ்கோர் 21.2 ஓவரில் 122 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. ரோகித் சர்மா 63 பந்தில் 63 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனார். அடுத்து விராட் கோலி களம் இறங்கினார். கோலி களம் இறங்கியதில் இருந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் லோகேஷ் ராகுல் 89 பந்தில் 77 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த் தலா 7 ரன்களிலும், கேதர் ஜாதவ் 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் இந்தியா 38.5 ஓவரில் 228 ரன்கள் சேர்த்து இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது.

ஆனால் மறுமுனையில் விராட் கோலி 51 பந்தில் அரைசதம் அடித்தது அணியை முன்னோக்கி எடுத்துச் சென்றார். 6-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். விராட் கோலிக்கு சப்போர்ட் கொடுக்கும் வகையில் ஜடேஜா விளையாடினார்.

கடைசி 24 பந்தில் 30 ரன்கள் தேவைப்பட்டது. 47-வது ஓவரை கீமோ பால் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் விராட் கோலி க்ளீன் போல்டானார். அவர் 81 பந்தில் 85 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். கோலி ஆட்டமிழந்ததும் இந்திய ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அடுத்து ஷர்துல் தாகூர் களம் இறங்கினார். முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். இந்த ஓவரில் இந்தியாவுக்கு 8 ரன்கள் கிடைத்தது. இதனால் கடைசி 3 ஓவரில் 22 ரன்கள் தேவைப்பட்டது.

48-வது ஓவரை காட்ரெல் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தை சிக்சருக்கு தூக்கிய ஷர்துல் தாகூர், 4-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். இதனால் இந்தியாவுக்கு 15 ரன்கள் கிடைத்தது. அத்துடன் இந்தியாவின் வெற்றி உறுதியானது.

இதனால் கடைசி 12 பந்தில் 7 ரன்கள் தேவைப்பட்டது. 49-வது ஓவரை கீமோ பால் வீசினார். 2-வது பந்தை ஜடேஜா பவுண்டரிக்கு விரட்டினார். 5-வது பந்தை நோ-பாலாக வீச இந்தியா 48.4 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 316 ரன்கள் அடித்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

ஜடேஜா 31 பந்தில் நான்கு பவுண்டரிகளுடன் 39 ரன்களுடனும், ஷர்துல் தாகூர் 6 பந்தில் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 17 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் கீமோ பால் 3 விக்கெட் வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் இந்தியா தொடரை 2-1 எனக்கைப்பற்றியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *