வெளிநாட்டில் மருத்துவம் படிக்கும் மாணவர்களின் 90 சதவீதம் பேர் இந்தியாவில் தகுதி பெற தவறுகிறார்கள் – மத்திய அமைச்சர் தகவல்

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்த நிலையில், அங்குள்ள இந்தியர்களை வெளியேற்றும் பணியில் இந்திய அரசு இறங்கியது. அப்போது கணக்கெடுக்கும்போது சுமார் 20 ஆயிரம் இந்திய மாணவர்கள் உக்ரைனில் படித்து வருவது தெரிய வந்தது. இதில பெரும்பான்மையான மாணவர்கள் மருத்துவம் படித்து வருகிறார்கள்.

ஏன் இந்திய மாணவர்கள் உக்ரைன் சென்று மருத்துவ படிப்பு படிக்க வேண்டும் என்ற கேள்வி அப்போதுதான் எழுந்தது. இந்தியாவில் உள்ள கல்லூரிகளில் அதிக கட்டணம், நீட் தேர்வு போன்ற பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. உக்ரைனில் குறைவான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுவதால் அங்கு ஏராளமானோர் சென்று படிப்பதாக கூறப்படுகிறது.

இந்த மிகப்பெரிய விவாதமாக மாறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், வெளிநாட்டில் மருத்துவம் படிக்கும் மாணவர்களில் 90 சதவீதம் பேர் இந்தியாவில் தகுதி பெற தவறுகிறார்கள மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில் ‘‘வெளிநாட்டில் மருத்துவம் படிக்கும் இந்திய மாணவர்களில் 90 சதவீதம் பேர் இந்தியாவில் நடத்தப்படும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற தவறி விடுகிறார்கள். இந்த நேரத்தில் மாணவர்கள் மருத்துவம் படிக்க ஏன் வெளிநாடு செல்கிறார்கள் என்பது குறித்து விவாதம் நடத்த இது சரியான நேரம் அல்ல’’ என்றார்.