வெட்டுக்கிளி படையெடுத்தால் சமாளிப்பது எப்படி? – வேளாண்துறை விளக்கம்

உலகிலேயே பேரழிவை ஏற்படுத்தும் இடம்பெயர் பூச்சியாக ‘பாலைவன வெட்டுக்கிளி’ என்ற வகையான வெட்டுக்கிளி கருதப்படுகிறது. இவை பயிர்களை அழித்து உணவு தட்டுப்பாட்டை ஏற்படுத்தக்கூடியவை. அதன்மூலம் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பு உண்டாகும்.

தற்போது, இந்த வெட்டுக்கிளிகள் கிழக்கு, மேற்கு ஆப்பிரிக்காவில் கென்யா, சோமாலியா, எத்தியோப்பியா, எரித்ரியா, உகாண்டா, சூடான், தான்சானியா, ஏமன் உள்ளிட்ட 10 நாடுகளில் மையம் கொண்டுள்ளன. அங்கு பெரும் நாசத்தை உண்டாக்கி வருகின்றன. அதே சமயத்தில், அடுத்த மாதம் இந்தியாவுக்கு படையெடுக்கும் என்று ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பின் வெட்டுக்கிளி கணிப்பு மைய மூத்த அதிகாரி கெய்த் கிரஸ்மன் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு குறித்து விளக்கம் அளித்துள்ள தமிழக வேளாண்துறை, வெட்டுக்கிளிகள் தாக்கினால் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும் தெரிவித்துள்ளது. அவை வருமாறு:-

* சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பயிர்பாதுகாப்பு மருந்தான வேம்பு சார்ந்த பூச்சி கொல்லிகள் மருந்தினை பயன்படுத்திடலாம்.

* மாலத்தியான் மருந்தினை, தெளிப்பான்கள் மற்றும் பெரிய டிராக்டர் மற்றும் தீ அணைக்கும் இயந்திரங்கள் மூலம் பரந்த அளவில் தெளித்து கட்டுப்படுத்திடலாம்.

* உயிரியல் கட்டுப்பாடு காரணியான மெட்டரைசியம் அனிசோபிலே என்ற எதிர் உயிர் பூஞ்சாணத்தினை தெளித்து கட்டுப்படுத்தலாம்.

* வெட்டுக்கிளைகளை சாப்பிடும் கோழி மற்றும் பறவைகள் பயன்படுத்தியும் கட்டுப்படுத்தலாம்.

* அரசு அனுமதியுடன் பூச்சி மருந்தினை ஒட்டுமொத்த வான்வெளி தெளிப்பு மூலம் தெளித்து கட்டுப்படுத்தலாம்.

இவ்வாறு வேளாண்துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *