Tamilசெய்திகள்

வெங்காயம் விளைச்சல் வீழ்ச்சிக்கு இது தான் காரணமாம்!

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதியில் வெங்காயம் மற்றும் கண்வலி விதைகள் பயிரிடப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட்ட தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்ததாவது:-

திண்டுக்கல், கரூர், திருப்பூர் மாவட்டங்களில் கண்வலி கிழங்கு சாகுபடி செய்த விவசாயிகளிடம் விதைகளை உரிய விலை கொடுத்து கொள்முதல் செய்ய மறுத்து கிலோ ரூ.1000 ரூ.1500 என அடிமாட்டு விலை நிர்ணயம் செய்து, விவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள். இதே விதைகளை பெரு வணிகர்கள் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துகிலோ ரூ30,000க்கு விற்பனை செய்து கொள்ளை லாபம் அடிகின்றனர். இது குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

தமிழகம் முழுவதும் சுமார் 10 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு தேவையான மழை பெய்திருந்தும் பரப்பலாறு அணை தூர் வாரி பராமரிப்பு செய்யாததால் முழு அளவு தண்ணீரை சேமிக்க முடியவில்லை. 58ம் கால்வாய் அமைப்புப் பணிகள் தரமற்ற முறையில் மேற்கொள்ளப்பட்டதால் முதன் முதல் திறக்கப்பட்ட தண்ணீர் கரைகளை உடைத்துக் கொண்டு வெளியேறுகிறது. ஆனால் பெருச்சாளி வகை எலிகள் கரையை உடைத்து விட்டதாக வருவாய் துறை அமைச்சர் கூறுவது நகைச்சுவையாக உள்ளது.

இந்தியா முழுவதும் வெங்காயம் வீழ்ச்சி அடைந்துள்ளது. விலை உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் உற்பத்தி செய்த விவசாயிகள் மிகப் பெரும் அழிவை சந்தித்துள்ளனர். குறிப்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் பாரம்பரிய நாட்டு வெங்காயம் சாகுபடி செய்த விவசாயிகள் 75 முதல் 90 நாட்களுக்குள் அறுவடை செய்து நல்ல மகசூல் பெற்றுள்ளனர். இதனை நீண்ட நாள் இருப்பு வைத்து விற்பனை செய்ய முடிகிறது.

ஆனால் பெரும் பகுதியான விவசாயிகளிடம் மகசூல் பெருக்கம் என்ற பெயரில் 150 நாள் வயதுடைய இருப்பு வைக்க இயலாத வீரிய ஒட்டு விதைகள் என்ற பெயரில் மரபணு மாற்று விதைகளை பயன்படுத்தி சாகுபடி செய்ததால் கொடிய நோய் தாக்குதலுக்குள்ளாகி அழுகி அழிந்து போயுள்ளன. இதனை இருப்பு வைத்து விற்பனை செய்யவும் முடியாமல் செயற்கையாக தட்டுப்பாட்டை ஏற்படுத்தி தேவைக்கு இறக்குமதி என்ற பெயரில் பதுக்கல்காரர்கள் கொள்ளை லாபம் அடித்து விவசாயிகளை அழித்து விட்டனர். எனவே மரபணு மாற்று விதைகளை தடை செய்து உற்பத்தியை பெருக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *