விஷ்ணு விஷாலுக்கு ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழில் வெண்ணிலா கபடி குழு, பலே பாண்டியா, குள்ள நரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் விஷ்ணு விஷால். இவர் நடித்துள்ள காடன், ஜகஜால கில்லாடி ஆகிய படங்களின் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. தற்போது எப்.ஐ.ஆர். எனும் படத்தை தயாரிப்பதோடு மட்டுமல்லாமல் அதில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதையடுத்து மோகன் தாஸ் படத்தில் நடிக்க உள்ளார் விஷ்ணு விஷால். களவு படத்தை இயக்கிய முரளி கார்த்திக் இப்படத்தை இயக்க உள்ளார். உண்மைக்கதையை மையமாக வைத்து உருவாக உள்ள இப்படத்தை விஷ்ணு விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.

இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதர நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.