விவசாய வேலை செய்யும் மத்திய அமைச்சரின் பெற்றோர்

சமீபத்தில் மத்திய மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் தமிழக பா.ஜனதா மாநில தலைவராக இருந்து வந்த எல்.முருகன் மத்திய இணை மந்திரியாக நியமிக்கப்பட்டார். இவருக்கு மீன்வளம், கால்நடை, பால் பண்ணை மற்றும் தகவல் ஒளிபரப்பு துறை ஒதுக்கப்பட்டது

இந்தியாவில் எத்தனையோ பெரு நகரங்கள் உள்ளபோதும், தமிழகத்தின் கடைகோடி கிராமத்தில் பிறந்த எல்.முருகனுக்கு கிடைத்த இந்த பதவி அனைவரையும் உற்று நோக்க வைத்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே உள்ள கோனூர் இவரது சொந்த கிராமம் ஆகும். இவரது பெற்றோர் லோகநாதன் (வயது 65), வரதம்மாள் (60). இவர்களுக்கு முருகன், ராமசாமி என 2 மகன்கள் இருந்தனர். இவர்கள் விவசாய வேலை செய்து தனது மகன்களை படிக்க வைத்தனர். இவர்களின் 2-வது மகன் ராமசாமி கடந்த 2016-ம் ஆண்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்து விட்டார்.

சிறுவயது முதலே படிப்பில் மிகவும் ஆர்வம் கொண்ட எல்.முருகன் சட்டப்படிப்பில் எம்.எல். மற்றும் பி.எச்டி. வரை முடித்து பா.ஜனதாவில் தன்னை இணைத்து கொண்டார். அவரது அயராத உழைப்பை கண்டு மத்திய அரசு அவருக்கு மத்திய இணை மந்திரி பதவியை வழங்கியது.

இதையொட்டி முருகன் கடந்த 7-ந் தேதி மத்திய இணை மந்திரியாக பதவியேற்று கொண்டார். தற்போது தமிழகத்தில் இருந்து மத்திய மந்திரியாக பதவியேற்றிருப்பவர் இவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. தனது மகன் மத்திய இணை மந்திரியாக பதவியேற்றாலும், இன்னமும் எவ்வித ஆடம்பரமும் இன்றி, விவசாய பணியை மேற்கொண்டு வருகின்றனர் அவரது பெற்றோர்.

வக்கீல் படிப்பை முடித்த எல்.முருகன் பா.ஜனதாவில் இணைந்து எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாநில துணைத்தலைவர், தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தேசிய துணைத்தலைவர், பா.ஜனதா மாநில தலைவர் என படிப்படியாக உயர்ந்து தற்போது, மத்திய இணை மந்திரி என்ற உச்சத்தை எட்டி உள்ளார். எல்.முருகனுக்கு, கலையரசி என்ற மனைவி உள்ளார். அவர் சென்னையில் குழந்தைகள் நல டாக்டராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு தர்னீஷ், இந்திரஜித் என்ற 2 மகன்கள் உள்ளனர்.

தனது மகன் போலீஸ் பாதுகாப்புடன் சைரன் வைத்த காரில் வலம் வந்தாலும், அவரது பெற்றோர் ஹாலோ பிளாக் கற்களை கொண்டு கட்டப்பட்ட ஆஸ்பெட்டாஸ் வீட்டில் எளிமையாக வாழ்ந்து வருகின்றனர். இதுகுறித்து அவரது தந்தை லோகநாதன் கூறியதாவது:-

எனது 2-வது மகன் ராமசாமி, உடல் நலக்குறைவால் இறந்து விட்டதால், அவருடைய மனைவி சாந்தி மற்றும் 3 பேரக்குழந்தைகள் எங்களுடன் தான் வசித்து வருகிறார்கள். நான் 16 வயதில் விவசாய பணிக்கு வந்து விட்டேன். முருகன் சிறு வயதில் இருந்தே நன்றாக படிப்பான்.

இங்குள்ள தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு வரை படித்த முருகன், பரமத்தி அரசு மேல்நிலைப்பள்ளியில் உயர்கல்வியை முடித்தான். தொடர்ந்து வக்கீலுக்கு படித்து, தற்போது கடின உழைப்பால் மத்திய இணை மந்திரியாக உயர்ந்து உள்ளான். இதை என்னிடம் சொன்னபோது நான் பூரிப்படைந்தேன். இது எங்களுக்கு மட்டும் அல்ல, அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. நான் அவனிடம் இந்த பதவியை வைத்து நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என அறிவுறுத்தி உள்ளேன். எங்களிடம் நீங்கள் வயல் வேலைக்கு போக வேண்டாம். எங்களோடு வந்து சென்னையில் இருங்கள் என்று அடிக்கடி சொல்வான். நாங்களும் 6 மாதத்திற்கு ஒரு முறை அங்கு சென்று 4 நாட்கள் தங்கி விட்டு வருவோம். அதற்கு பிறகும் எங்களால் அங்கு இருக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய இணை மந்திரி முருகனின் நண்பரும், வக்கீலுமான பொன்னுசாமி கூறியதாவது:-

நாங்கள் இருவரும், சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியில், பி.எல். படித்தோம். தொடர்ந்துஅவர் சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.எல். பி.எச்டி. பட்டம் பெற்றார். படிக்கின்ற காலத்திலேயே அவருக்கு அரசியல் மீது அதிக ஆர்வம் உண்டு. எனவே அவர் தன்னை அகில பாரத வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி.,) மாணவர் அமைப்பில் இணைத்து கொண்டார். தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதா கூட்டங்களில் பங்கேற்று வந்தார். அவரது உழைப்பை கண்டு, மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜனதா அரசு அவருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் பதவியை கொடுத்தது. பின்னர் பா.ஜனதாவின் மாநில தலைவரான அவர், தற்போது மத்திய இணை மந்திரியாக பொறுப்பேற்று உள்ளார். இது முழுக்க முழுக்க அவரது உழைப்புக்கு கிடைத்த பரிசு ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முருகன் மத்திய இணை மந்திரியாக இருந்தாலும் எதையும் பற்றி கவலைப்படாமல் அவரது தந்தை லோகநாதன் தற்போதும் சைக்கிளில் மண்வெட்டியுடன் விவசாய வேலைக்கு சென்று விடுகிறார்.

எனக்கு முடிந்த வரை இந்த வேலையை செய்வேன் என்றும், சொந்த கிராமத்தை விட்டு எங்கும் செல்ல மாட்டேன் எனவும் லோகநாதன் கூறினார். இவரது எளிமையான வாழ்க்கை அனைத்து தரப்பு மக்களாலும் பாராட்டப்பட்டு வருகிறது.

மத்திய இணை மந்திரியாக எல்.முருகன் பதவி ஏற்று உள்ளதால், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோனூர் என்னும் சிறிய கிராமம் முக்கியத்துவம் வாய்ந்த கிராமமாக மாறியிருக்கிறது.