விராட் கோலிதான் கேப்டன், நான் துணை கேப்டன் – ரஹானே

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை மறுநாள் (பிப்ரவரி 5-ந்தேதி) நடக்கிறது. இந்தியா- ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் நடைபெறும் முதல் டெஸ்டில் இதுவாகும்.

அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் விராட் கோலி கேப்டனாக இருந்தார். இந்த போட்டியின் 2-வது இன்னிங்சில் இந்தியா 36 ரன்னில் சுருண்டு படுதோல்வியடைந்தது. அதன்பின் விராட் கோலி, அவரது மனைவிக்கு குழந்தை பிறக்க இருந்ததால் சொந்த நாடு திரும்பினார்.

விராட் கோலி இல்லை, வீரர்கள் காயம், நெருக்கடி ஆகியற்றிற்கிடையில் ரஹானே கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பொறுப்பு கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு மூன்று போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்று, ஒன்றை டிரா செய்து தொடரை 2-1 எனக் கைப்பற்றினார்.

இதனால் ரஹானேவை கேப்டனாக நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த நிலையில் விராட் கோலி அணிக்கு திரும்பி கேப்டன் பொறுப்பை ஏற்கிறார்.

இதுகுறித்து ரஹானே கூறுகையில் ‘‘முதலில் விராட் கோலிதான் கேப்டன். நான் துணைக் கேப்டன். நேர்மறையாக பார்வையோடு அவர் அணியில் எங்களுடன் இணைந்ததால், நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு அணியாக நாங்கள் இணைந்து விளையாடுவதில் கவனம் செலுத்துவோம்.

தற்போதைய நிலையில் நான் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறேன். என்னைப் பொறுத்த வரைக்கும், அணிக்கு எது தேவையோ, அதை நான் கொடுக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில், என்னுடைய தனிப்பட்ட ஆட்டத்தை விட அணிக்கு ஏற்ற வகையில் விளையாட வேண்டும்’’ என்றார்.