விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த நடிகர் அமிதாப் பச்சன்

இந்தி நடிகர் அமிதாப்பச்சன் ஏற்கனவே கொரோனா தொற்றில் சிக்கி சிகிச்சை பெற்று மீண்டார். சில வாரங்களுக்கு முன்பு டெல்லியில் உள்ள ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் இல்லாமல் நோயாளிகள் உயிர் இழந்த சம்பவமும், மருத்துவமனைகளில் படுக்கை மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதாக வெளியாகும் தகவல்களும் அமிதாப்பச்சனை கவலையடைய வைத்துள்ளது.

இதையடுத்து டெல்லியில் உள்ள கொரோனா சிகிச்சை மருத்துவ மையத்துக்கு அமிதாப்பச்சன் ரூ.2 கோடி நிதி உதவி வழங்கி உள்ளார். 300 படுக்கை வசதிகள் கொண்ட இந்த மருத்துவ மையத்துக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களையும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து வழங்கி இருக்கிறார்.

கொரோனாவால் பாதிக்கப்படுவோருக்கு நடிகர் நடிகைகள் உதவ மனம் இல்லாமல் இருக்கிறார்கள் என்று விமர்சனங்கள் வருகின்றன. இதற்கு பதில் அளித்து அமிதாப்பச்சன் கூறும்போது “செய்த உதவிகளை வெளியே சொல்வதில் எனக்கு விருப்பம் இல்லை. கொரோனா ஆரம்பித்ததில் இருந்து சிகிச்சை பெறுவோருக்கும், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும், முன்களப் பணியாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் ஏராளமான உதவிகளை செய்து இருக்கிறேன்” என்றார்.