விஜய், ரஜினி குறித்து சர்ச்சை பேச்சு! – மன்னிப்பு கேட்ட இயக்குநர் ராஜு முருகன்
குக்கூ, ஜோக்கர் உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் ராஜு முருகன். தோழா, மெஹந்தி சர்க்கஸ் படங்களுக்கு வசனமும் எழுதியுள்ளார். இவர் ஜீவாவை வைத்து இயக்கியுள்ள ‘ஜிப்ஸி’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், இவர் சமீபத்தில் ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்டு பேசும்போது, ‘யார் யாரோ சூப்பர்ஸ்டார், இளைய தளபதினு இருக்கும்போது நம்ம பையனுக்கு (படத்தின் கதாநாயகன்) ஒரு பேர் வச்சு விடுங்க… என்று கூறியிருக்கிறார்.
இது ரஜினி, விஜய் ரசிகர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. சமூக வலைத்தளத்தில் கண்டனங்களும் எழுந்தது. இதையடுத்து இயக்குனர் ராஜு முருகன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஒரு இசை வெளியீட்டு நிகழ்வில் எந்த உள்நோக்கமும் இல்லாமல் உற்சாகப்படுத்துவதற்காக பேசப்பட்ட விசயம் அது. வார்த்தைகள் தவறாக அமைந்ததற்கு வருந்துகிறேன். ரஜினி அவர்களும், விஜய் அவர்களும் தங்களது உழைப்பால், அர்ப்பணிப்பால் தமிழ் சினிவாவின் இந்த உச்சங்களைத் தொட்டவர்கள். கலைத்துறையில் அவர்களது பங்களிப்பின் மேல் உயர்ந்த மரியாதை எப்போதும் எனக்கிருக்கிறது’ என்று பதிவு செய்திருக்கிறார்.