விஜய்க்கு வில்லனாகும் இந்தி நடிகர் ஜான் ஆபிரகாம்

நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகளுடன் இந்த படம் தயாராகி வருகிறது.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்துள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த திட்டமிட்டு இருந்தனர். கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தளபதி 65 படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாமை படக்குழு அணுகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.