வாரிசு இயக்குநர் படத்தில் நடிக்கும் பாபி சிம்ஹா

பாபி சிம்ஹா நடிப்பில் தற்போது புத்தம் புது காலை என்னும் ஆந்தாலஜி படம் வெளியானது. இதில் மிராக்கிள் என்ற தலைப்பில் திருடனாக பாபி சிம்ஹா நடித்திருந்தார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

தமிழ், தெலுங்கு என பிசியாக இருக்கும் பாபி சிம்ஹா இப்போது புதிய படமொன்றில் மீண்டும் தன்னை நீருபிக்க தயாராகியுள்ளார். 5 ஆண்டுகளுக்கும் மேலாக விளம்பரப்பட உலகில் பிரபலமான விக்ரம் ராஜேஷ்வர் இப்படத்தை இயக்கவுள்ளார்.

பாபி சிம்ஹா – விக்ரம் ராஜேஷ்வர் இணையும் கேங்க்ஸ்டர் படத்துக்கு ‘அவள் அப்படித்தான்’, ‘பன்னீர் புஷ்பங்கள்’, ‘கடலோர கவிதைகள்’, ‘சீவலப்பேரி பாண்டி’, மற்றும் பல படங்களின் கதை, திரைக்கதை, வசனம் எழுதிய கே.ராஜேஷ்வர் இப்படத்திற்கும் எழுதுகிறார். இவர் விக்ரம் ராஜேஷ்வரின் தந்தை. ‘நியாய தராசு’, ‘அமரன்’, ‘துரைமுகம்’, ‘அதே மனிதன்’, ‘இந்திர விழா’ மற்றும் பல படங்களையும் கே.ராஜேஷ்வர் இயக்கியுள்ளார்.

தற்போது இதன் ஆரம்பக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 2021-ம் ஆண்டு தொடக்கத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.