‘வலிமை’ அப்டேட் குறித்து பேசிய கிரிக்கெட் வீரர் மொயின் அலி

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலி, சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். மேலும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என்பதையும் அவர் தெரிவித்தார். கிரிக்கெட் வீரர் மொயின் அலி, தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்நிலையில், மொயின் அலி தனது டெஸ்ட் கெரியரில் நிகழ்ந்த மறக்க முடியாத அனுபவங்கள் குறித்து பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகி உள்ளது.

அதில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த டெஸ்ட் போட்டியின் போது ரசிகர் ஒருவர் திடீரென என்னை அழைத்து ‘வலிமை’ அப்டேட் என கேட்டார். அதை என்னால் மறக்க முடியாது என்று மொயின் அலி கூறியுள்ளார். இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அஸ்வின், ‘அப்பவே சொன்னேன்’ என்று சிரிக்கும் எமோஜிகளுடன் பதிவிட்டுள்ளார்.