வருடத்திற்கு ஒரு தமிழ்ப் படத்தில் நடிப்பேன் – நடிகை டாப்ஸி அறிவிப்பு

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை டாப்சி இப்போது இந்தியில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்தி திரையுலகில் அவருக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளம் சேர்ந்துள்ளது. சினிமாவுக்கு வந்த புதிதில் சில தவறுகளை செய்ததாக டாப்சி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “நான் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்தபோது கதைகளை தேர்வு செய்யும் முறையில் சில தவறுகளை செய்தேன். வணிக படங்கள்தான் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று நினைத்து அதுமாதிரியான படங்களை தேர்வு செய்து நடித்தேன். அதுதான் நான் செய்த தவறு. அதன் பிறகு நான் என்ன மாதிரி படங்களைப் பார்க்க விரும்புகிறேனோ, அதுபோன்ற கதைகளை தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்தேன்.

அது எனக்கு சாதகமாக அமைந்தது. ஆனாலும் ஒரு ரசிகையின் பார்வையில் இருந்து நான் மாறவில்லை. கதை கேட்கும்போது நடிகையாக கேட்காமல், பார்வையாளராகவே என்னை நினைத்துக்கொண்டு கேட்டு அதில் நடிக்கலாமா? நடிக்க வேண்டாமா? என்று முடிவு செய்கிறேன். இந்தி படங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தாலும் தென்னிந்திய சினிமாவை ஒதுக்கவில்லை. தமிழ், தெலுங்கில் வருடத்துக்கு ஒருபடம் நடிப்பேன்” என்றார்.