வடிவேலுவின் படத்தை கைப்பற்றிய யோகி பாபு
இம்சை அரசன்-2 படத்தில் நடிக்க மறுத்த வடிவேலுக்கு தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்ததால் 2 வருடங்களாக புதிய படங்களில் அவர் நடிக்கவில்லை. இதனால் நிறைய பட வாய்ப்புகளை இழந்தார். இந்த இடைவெளியை யோகிபாபு பயன்படுத்திக்கொண்டார்.
வடிவேலுக்கு பதிலாக நகைச்சுவை கதாபாத்திரங்களுக்கு யோகிபாபுவை இயக்குனர்கள் ஒப்பந்தம் செய்தனர். நயன்தாராவே சிபாரிசு செய்யும் அளவுக்கு உயர்ந்தார்.
கடந்த வருடம் மட்டும் யோகிபாபு நடித்து 19 படங்கள் திரைக்கு வந்தன. தற்போது 20-க்கும் மேற்பட்ட படங்கள் கைவசம் வைத்துள்ளார். கூர்கா, ஜாம்பி படங்களில் கதாநாயகனாகவும் வந்தார். பிரபல இயக்குனர் ஷக்தி சிதம்பரம் பேய் மாமா என்ற படத்தில் நடிக்க வடிவேலுவை ஒப்பந்தம் செய்து இருந்தார்.
தற்போது இம்சை அரசன்-2 பிரச்சினை காரணமாக அவரை நீக்கி விட்டு யோகிபாபுவை ஒப்பந்தம் செய்து படவேலைகளை தொடங்கி உள்ளார். இதன் படப்பிடிப்பு தற்போது குமுளி பகுதியில் நடந்து வருகிறது. யோகிபாபு படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருகிறார். இம்சை அரசன் 2-ம் பாகம் படத்திலும் வடிவேலுக்கு பதில் யோகிபாபுவை நடிக்க வைக்க ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதன் மூலம் வடிவேலுக்கு போட்டியாக யோகிபாபு மாறி இருப்பதாக பட உலகில் பேசுகின்றனர். இந்த நிலையில் வடிவேலு பிரச்சினையில் தற்போது சமரசம் ஏற்பட்டு உள்ளதாகவும் இந்தியன்-2 படத்தில் கமல்ஹாசனுடன் அவர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.