வங்கி ஏடிஎம்-களில் நூதன முறையில் நடந்த கொள்ளை! – முக்கிய குற்றவாளி கைது

கடந்த 3 நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். மையங்களில், பணம் போடும் எந்திரங்கள் வாயிலாக நூதன முறையில் பணம் திருட்டு நடந்துள்ளது. தமிழகம் முழுவதும் இது தொடர்பாக 19 புகார்கள் வந்துள்ளன.

இதனால் பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.48 லட்சம் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. வங்கி வாடிக்கையாளர்களுக்கு இதனால் இழப்பீடு ஏற்படவில்லை. சென்னையில் கடந்த 17-ந்தேதி, 18-ந்தேதி மற்றும் 19-ந்தேதி ஆகிய 3 நாட்களில் இந்த சம்பவங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக சென்னையில் 7 புகார்கள் வந்துள்ளன.

சாதாரண வங்கி அட்டையை பயன்படுத்தி பணம் போடும் எந்திரத்தில் பலமுறை பணத்தை எடுத்துள்ளனர். ஆனால் பணத்தை எடுத்த தகவல் வங்கிக்கு தெரியாதபடி நூதன முறையை கையாண்டு இந்த திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன.

தமிழகத்தில் முதல் முறையாக இது போன்ற நூதன திருட்டு நடந்துள்ளது. மேலும் வடமாநில கும்பல் இதில் சம்பந்தப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நூதன திருட்டு சம்பவங்களில் தொடர்புடைய கொள்ளையர்கள் ராஜஸ்தான் மற்றும் அரியானா மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்று கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்களை பிடிக்க தனிப்படையினர் அரியானா விரைந்தனர்.

இந்நிலையில் ஏ.டி.எம். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

அரியானா மாநிலம் மேவாக் பகுதியில் தனிப்படை போலீசார் கொள்ளையனை கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

இதையடுத்து எஸ்.பி.ஐ ஏடிஎம் கொள்ளை வழக்கு, மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

அனைத்து எஸ்.பி.ஐ வங்கிகளிலும் பணம் சரியாக உள்ளதா என சோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.