ரோப் கார் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி உதவி – ஜார்க்கண்ட் அரசு அறிவிப்பு

ஜார்க்கண்ட் மாநிலத்தின் தியோகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது பாபா வைத்யநாத் கோவில். இது சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்க கோவில்களில் ஒன்று.

திரிகுட் மலை மீது சென்று இந்த கோவிலுக்கு தரிசனம் செய்ய சுற்றுலா பயணிகள், பக்தர்களுக்கு வசதியாக மாநில சுற்றுலாத்துறை சார்பில் ரோப் கார் வசதி செய்யப்பட்டு இருக்கிறது.

இந்தியாவின் மிக உயரமான செங்குத்தாக அமைக்கப்பட்டுள்ள ரோப் கார் இதுவாகும். 1,500 அடி உயரம் கொண்ட திரிகுட் மலையில் அமைந்துள்ள இந்த ரோப் கார் 766 மீட்டர் நீளம் கொண்டது.

இதற்கிடையே, நேற்று முன்தினம் ரோப் கார்கள் மூலம் கோவிலுக்கு செல்ல சுற்றுலா பயணிகள் உள்பட 48-க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்தனர். ரோப் கார்கள் மலை உச்சியில் சென்று
கொண்டிருந்தபோது திடீரென ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது.

தகவலறிந்து இந்திய விமானப்படை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் நடந்தது. இந்த விபத்தில் 3 பேர் பலியாகினர்.

இந்நிலையில், ரோப் கார் விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள ஜார்க்கண்ட் மாநில முதல் மந்திரி ஹேமந்த் சோரன், உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம்
இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.