Tamilசெய்திகள்

ரெடில் விபத்து நடந்த கிராம மக்கள் இறந்தவர்களுக்கு 10ம் நாள் ஈமச்சடங்கு செய்தனர்

ஒடிசா மாநிலம், பாலசோர் மாவட்டம், பஹானகா பகுதியில் கடந்த 2- ந்தேதி கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரெயில் உள்பட 3  ரெயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் 288 பயணிகள் பரிதாபமாக இறந்தனர். 900-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

நாட்டையே உலுக்கிய இந்த கோரவிபத்து நடந்த பகுதியில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. விபத்து நடந்த பகுதியில் வசிக்கும் மக்கள், இன்னும்  அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. ரெயில் தண்டவாளத்தில் இறந்தவர்கள் உடல்கள் சிதறி கிடந்த காட்சியும், படுகாயம் அடைந்தவர்களின் அலறல் ஓசையும் இன்னும் மனதை விட்டு அகலவில்லை என ஊர் மக்கள் கூறிவந்தனர்.

ரெயில் விபத்து நடந்து 10 நாள் ஆகிவிட்ட நிலையில் விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு கிராம மக்கள் 10- ம் நாள் ஈமச்சடங்குகள் செய்தனர். இறந்தவர்களுக்கு அவர்களின் குடும்பத்தினர் என்னென்ன சடங்குகள் செய்வார்களோ, அந்த சடங்குகள் அனைத்தையும் விபத்து நடந்த பகுதி கிராம மக்களே செய்தனர். இதுபற்றி அந்த பகுதியின் பஞ்சாயத்து சமிதி தலைவர் சரத்ராஜ் கூறியதாவது:-

ரெயில் விபத்தில் இறந்தவர்களின் உடல்களை நாங்கள் தான் அகற்றினோம். இதனால் அவர்களின் ஆன்மா அமைதியடைய ஈமச்சடங்குகளை நாங்களே செய்ய  முடிவு செய்தோம். அதன்படி விபத்து நடந்த பகுதியில் உள்ள கிராம குளத்தில் நாங்கள் அனைவரும் ஒன்று கூடி, இறந்தவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்தோம்.

அதன்படி எங்கள் கிராமத்தை சேர்ந்த 116 பேர் மொட்டை அடித்து கொண்டோம், அன்று மாலையில் இறந்தவர்கள் நினைவாக அன்னதானமும் வழங்கினோம். இதுபோல விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் விரைவில் நலமடைய சர்வசமய பிரார்த்தனையும் நடத்த உள்ளோம்.

இன்றும், நாளையும் இந்த கூட்டு பிரார்த்தனை நடக்க உள்ளது, என்றார். ரெயில் விபத்து நடந்த பகுதியில் பேய்கள் உலாவுவதாக எழுந்த பீதியை தொடர்ந்து கிராம மக்கள் அதற்கான சடங்குகளையும் செய்து வருகிறார்கள். மேலும் இங்கு இறந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்ட பள்ளி கட்டிடத்தை இடிக்கவும் நடவடிக்கை  எடுக்கப்பட்டு வருகிறது.