ரூ.3 கோடி மோசடி புகார் – முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் மீண்டும் விசாரணை

விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த தொழிலதிபர் ரவீந்திரன், அ.தி.மு.க.நிர்வாகி விஜயநல்லதம்பி ஆகியோர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது ரூ.3 கோடி மோசடி செய்ததாக போலீசில் புகார் தெரிவித்தனர்.
இதன் அடிப்படையில் ராஜேந்திரபாலாஜி, அவரது உதவியாளர்கள் பாபுராஜ், ரமணா, பலராமன் ஆகிய 4 பேர் மீது 2 வழக்குகளை விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு ராஜேந்திர பாலாஜி ஐகோர்ட்டில் மனு செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து தலைமறைவான ராஜேந்திர பாலாஜியை கடும் முயற்சிக்கு பின் தமிழக போலீசார் கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியில் கைது செய்தனர்.

இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட்டு வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் ஜாமீன் வழங்கியது.
அதன்படிட கடந்த 12-ந் தேதி ராஜேந்திரபாலாஜி, விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், இன்ஸ்பெக்டர் கணேஷ் தாஸ் ஆகியோர் விசாரணை நடத்தினர். இரவு 10.30 மணி வரை 11 மணி நேரம் போலீசார் விசாரணையை தொடர்ந்தனர்.

சுமார் 134 கேள்விகள் ராஜேந்திர பாலாஜியிடம் கேட்டப்பட்டு பதில் பெறப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

விசாரணை முடிவில் இன்று (15-ந்தேதி) மீண்டும் ஆஜராகுமாறு ராஜேந்திர பாலாஜியிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை 10.30 மணியளவில் ராஜேந்திரபாலாஜி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார்.
அவரிடம் மோசடி வழக்குகள் தொடர்பாக இன்றும் விசாரணை நடத்தப்பட்டது. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.