ரிஷப் பண்டின் சொதப்பலான ஆட்டத்தால் பரிபோகும் கேப்டன் பதவி?

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரும் விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட், தற்போது இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் டெஸ்ட் தொடரில் தொடர்ச்சியாக சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் அவர் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக தொடர்வாரா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

இதற்கு முக்கிய காரணம், இங்கிலாந்துக்கு எதிராக ரிஷப் பண்ட்டின் ஃபார்ம் மிக மோசமாக இருப்பதே. அவர் 4 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ள நிலையில் இதுவரை ஒரேயொரு அரை சதம் கூட அடிக்கவில்லை. அவருக்கு பதிலாக இந்திய அணியில், விக்கெட் கீப்பர் சஹா விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இப்படியான நேரத்தில், நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் பாக்கி போட்டிகள் விரைவில் ஆரம்பிக்க உள்ளன. அதில் டெல்லி அணி சார்பில் பண்ட் கேப்டனாக தொடர்வாரா மாட்டாரா என்கிற சந்தேகங்கள் எழுந்துள்ளன.

அதே நேரத்தில் நடப்பாண்டு ஐபிஎல் தரவரிசையில் டெல்லி அணி முதலிடத்தில் இருப்பதால், அவர் கேப்டனாக தொடர்வதில் சிக்கல் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.