Tamilசெய்திகள்

ராமநாதபுரத்தில் மருத்துவக் கல்லூரி – முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவக்கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. மத்திய-மாநில அரசுகள் நிதி பங்களிப்பில் இந்த மருத்துவக்கல்லூரிகள் அமைய உள்ளன.

இதில் ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் அமைய உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி ராமநாதபுரத்தில் காலை 10 மணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதற்காக கலெக்டர் அலுவலக வளாகத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு இருந்தது

அடிக்கல் நாட்டு விழாவுக்கு மத்திய சுகாதாரத் துறை மந்திரி ஹர்சவர்த்தன் தலைமை தாங்கினார். தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விழாவில் பங்கேற்று புதிய மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 21 ஆயிரம் பயனாளிகளுக்கு அரசின் பல்வேறு துறை சார்ந்த நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் மாவட்டத்தில் முடிவுற்ற பல்வேறு திட்டங்களையும் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

புதிய மருத்துவக்கல்லூரி கலெக்டர் அலுவலகம் அருகில் 22 ஏக்கர் பரப்பளவில் ரூ.345 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ளது.

அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் சண்முகம், கலெக்டர் வீரராகவராவ் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கட்சியினர், பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.

விருதுநகர் மாவட்ட மருத்துவக்கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா மாலை 3 மணிக்கு நடக்கிறது. மத்திய மந்திரி ஹர்சவர்த்தன் தலைமை தாங்குகிறார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிய மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டுகிறார். இங்கு ரூ.380 கோடி மதிப்பீட்டில் மருத்து வக்கல்லூரி அமைய உள்ளது.

விழாவின்போது சிவகாசி, விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை தொகுதியில் ரூ.234 கோடி செலவில் முடிவடைந்துள்ள தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டங்களையும், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

மேலும் அருப்புக்கோட்டை, சாத்தூர், விருதுநகர் நகராட்சிகளுக்காக ரூ.444 கோடியே 71 லட்சம் மதிப்பிலான தாமிரபரணி புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் உள்பட பல புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். விழாவில் 22 ஆயிரத்து 300 பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார்.

விழாவில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ராஜேந்திரபாலாஜி, தலைமை செயலாளர் சண்முகம், மாவட்ட கலெக்டர் கண்ணன் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அ.தி.மு.க. பிரமுகர்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்க உள்ளனர்.

விழாவுக்காக மருத்துவக் கல்லூரி அமைய உள்ள 22 ஏக்கர் நிலத்தில் பிரமாண்ட மேடை, பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் முதல்-அமைச்சரை வரவேற்று கட்சியினர் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

முன்னதாக அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காலை 7.30 மணிக்கு விமானம் மூலம் மதுரை வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

தொடர்ந்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கார் மூலம் ராமநாதபுரம் புறப்பட்டார். விமான நிலையம் அருகே அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமையில் திரண்ட கட்சியினர் அம்பேத்கார் சிலை அருகே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்றனர்.

விரகனூர் சந்திப்பில் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் திரளான கட்சியினர் கலந்து கொண்டனர்,

அதன் பிறகு எடப்பாடி பழனிசாமி ராமநாதபுரம் நோக்கி சென்றார். அவரை வரவேற்று அ.தி.மு.க. கொடிகள் கட்டப்பட்டு இருந்தன. பல்வேறு ஊர்களிலும் கட்சியினர் திரண்டு நின்று வரவேற்றனர்.

இதேபோல் விருதுநகருக்கு மாலையில் வரும் முதல்வரை வரவேற்றும் மதுரை-விருதுநகர் சாலையில் வழிநெடுக அலங்கார வளைவுகள், கொடி, தோரணங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

முதல்வர் பங்கேற்கும் விழாக்களை முன்னிட்டு தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன், மதுரை மாநகர போலீஸ் கமி‌ஷனரும், கூடுதல் டி.ஜி.பி.யுமான டேவிட்சன் தேவாசீர்வாதம், டி.ஐ.ஜி. ஆனி விஜயா, ரூபேஸ்குமார் மீனா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மணிவண்ணன், ராஜராஜன், பெருமாள் தலைமையில் 3 மாவட்டங்களிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *