ராணுவ முத்திரை! – டோனிக்கு ஐசிசி கோரிக்கை
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் நேற்று முன் தின லீக் ஆட்டத்தில் இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 228 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 47.3 ஓவர்களில் 230 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
நேற்றைய ஆட்டத்தில் டோனி கீப்பிங் செய்த போது அணிந்திருந்த கிளவ்ஸில் இந்தியாவின் துணை ராணுவ சிறப்பு படையின் முத்திரை பதிக்கப்பட்டிருந்தது. இந்த முத்திரையின் அர்த்தம் தியாகம் என்பதாகும். பாலிடான் முத்திரையை அணிய துணை ராணுவ கமாண்டோக்களுக்கு மட்டுமே அனுமதி உள்ளது. இருப்பினும் கடந்த 2011 ஆம் ஆண்டு டோனிக்கு இந்திய ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் பதவி அளிக்கப்பட்டதால் அவர் இந்த முத்திரையை பயன்படுத்தலாம்.
இந்த புகைப்படம் இது டோனியின் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்களால் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு பாராட்டை பெற்று வந்தது.
இந்நிலையில் ராணுவ முத்திரை பதித்த கிளவ்சை டோனி பயன்படுத்த வேண்டாம் என பிசிசிஐ-க்கு ஐசிசி கோரிக்கை வைத்து உள்ளது.
இதுகுறித்து , ஐசிசி பொது மேலாளர், கிளாரி பேசுகையில், “ராணுவ முத்திரை பதித்த கிளவ்சை டோனி பயன்படுத்த வேண்டாம். அதை அகற்றுமாறு பி.சி.சி.ஐ.க்கு நாங்கள் கோரியுள்ளோம்,” என்றார்.
“ஐ.சி.சி விதிகளின்படி ஐ.சி.சி உபகரணங்கள் மற்றும் ஆடை ஆகியவற்றில் அரசியல், சமய, இனவாத அல்லது தேசியவாத முத்திரைகள் அல்லது குறியீடுகள் ஆகியவற்றை பயன்படுத்த அனுமதி இல்லை. எனவே ராணுவ முத்திரை பதித்த கிளவ்சை டோனி பயன்படுத்த வேண்டாம். அந்த முத்திரையை அகற்றுமாறு நாங்கள் பிசிசிஐ-யிடம் கோரிக்கை வைத்துள்ளோம்,” என்றும் அவர் கூறியுள்ளார்.