ராஜபக்சே குடும்பம் பதவி விலக வேண்டும் என்று பெரும்பாலோனர் விருப்பம் – கருத்து கணிப்பில் தகவல்

இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இதன் பாதிப்புகள் குறித்து ‘மாற்று கொள்கைக்கான மையம்’ என்ற அமைப்பு இலங்கை முழுவதும் கருத்து கணிப்பு நடத்தியது.

88 சதவீதம் பேர் தாங்களோ அல்லது தங்கள் குடும்பத்தில் ஒருவரோ சமையல் கியாஸ், பெட்ரோல், டீசல், பால் பவுடர், உரம் போன்ற அத்தியாவசிய பொருட்களை பெற நீண்ட வரிசையில் நின்று கஷ்டப்பட்டதாக கருத்து தெரிவித்தனர்.

10-ல் 9 பேர் தங்கள் வருமானமோ அல்லது தங்கள் குடும்ப உறுப்பினரின் வருமானமோ பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறினர். மொத்த இலங்கை மக்களில் பாதிப்பேர், ஏதேனும் ஒரு போராட்டத்தில் பங்கேற்று இருப்பது தெரிய வந்தது.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசே காரணம் என்று மக்கள் ஒருமித்த கருத்துடன் தெரிவித்தனர். 62 சதவீத இலங்கை மக்கள், கோத்தபய ராஜபக்சே அரசின் தவறான பொருளாதார கொள்கைகளை குற்றம் சாட்டினர்.

14.5 சதவீதம் பேர் சுதந்திரத்துக்கு பிந்தைய அனைத்து அரசுகளின் தவறான ஆட்சிமுறையையும், 14.4 சதவீதம் பேர் நாட்டின் ஊழல் அரசியல் கலாசாரத்தையும் குறை கூறினர்.

10-ல் 9 பேர் பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்றும், ராஜபக்சே குடும்பம், இலங்கை அரசியலில் இருந்து விலக வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தனர். 87 சதவீதம் பேர் அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தனர். இப்படி கருத்து தெரிவித்தவர்களில் 3 ஆண்டுகளுக்கு முன்பு கோத்தபய ராஜபக்சேவுக்கு ஓட்டுப்போட்ட பெரும்பான்மை சிங்களர்களும் அடங்குவர். எனவே, பொருளாதார சிக்கல்களில் இருந்து தங்களை மீட்க ராஜபக்சே குடும்பத்தால் முடியாது என்று அனைத்து இனத்தினரும் கருதுவது தெரிய வந்துள்ளது.

58 சதவீதம் பேர் நெருக்கடியில் இருந்து இலங்கை மீண்டு வருவதற்கு நீண்ட காலம் ஆகும் என்றும், 14 சதவீதம் பேர் சிறிது காலம் ஆகும் என்றும், 2 சதவீதம் பேர் மட்டும், விரைவிலேயே பொருளாதாரம் மீண்டெழும் என்றும் கருத்து தெரிவித்தனர்.

பொருளாதாரம் எப்போது மீண்டு வரும் என்று தெரியாது என்று 26 சதவீதம் பேர் கூறினர். 96 சதவீதம் பேர் எல்லா கட்சி அரசியல்வாதிகளின் சொத்துகளை ஆய்வு செய்து, கணக்கில் காட்டாத சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.