ரஜினி பட டைட்டிலை கைப்பற்றிய சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடித்து வெளியான ‘டாக்டர்’ மற்றும் ‘டான்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் மக்கள் மத்தியில் இந்த இரண்டு திரைப்படங்களும் பெரும் வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கி வரும் ‘பிரின்ஸ்’ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரியா போஷாப்கா கதாநாயகியாகவும், சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள். தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு மனோஷ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தை தொடர்ந்து ‘மண்டேலா’ பட இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்து புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இப்படத்தின் அப்டேட் இன்று காலை 10.10 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அறிவித்தபடி இப்படத்தின் அறிவிப்பு வீடியோ பதிவின் மூலம் வெளியிடப்பட்டது. இப்படத்திற்கு ரஜினி நடிப்பில் 1986-ஆம் ஆண்டு இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் வெளியான ‘மாவீரன்’ படத்தின் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் ரஜினி போன்ற பாவனைகளுடன் சிவகார்த்திகேயன் சண்டையிடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. ரஜினியின் தீவிர ரசிகரான சிவகார்த்திகேயன் அவரின் படத்திற்கு ரஜினி பட பெயரை வைத்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.