ரஜினி படத்தை இயக்கும் தேசிங்கு பெரியசாமி

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்காக தொடங்கிய மக்கள் மன்றத்தை கலைத்து முன்புபோல் ரஜினி ரசிகர் நற்பணி மன்றமாக மாற்றியதுடன், இனிமேல் அரசியலுக்கு வரப்போவது இல்லை என்பதையும் உறுதிப்படுத்தி உள்ளார். தற்போது படங்களில் நடிக்க தீவிரம் காட்டி வருகிறார் ரஜினி. அவர் நடித்து வரும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

விரைவில் ரஜினியின் 169-வது படத்துக்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினிக்கு கார்த்திக் சுப்புராஜ், ஏ.ஆர்.முருகதாஸ், தேசிங்கு பெரியசாமி உள்ளிட்ட சில இயக்குனர்கள் கதை தயார் செய்துள்ளனர். இவர்களில் தேசிங்கு பெரியசாமிக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இவர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கி பிரபலமானவர்.

இந்த படம் வெற்றி பெற்றதையடுத்து, இயக்குனர் தேசிங்கு பெரியசாமியை ரஜினி நேரில் அழைத்து பாராட்டினார். அப்போது தனக்கு கதை இருக்கிறதா என்று ரஜினி கேட்க உடனே தேசிங்கு பெரியசாமி ஒரு கதையை சொன்னதாகவும், அது ரஜினிக்கு பிடித்து போனதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தை விஜய்யின் பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தை 6 மாதத்தில் நடித்து முடிக்க ரஜினி திட்டமிட்டுள்ளாராம்.