யுவன் இசையில், சிம்பு படம் இயக்க வேண்டும் – விருப்பம் தெரிவித்த இயக்குநர்

நடிகராக மட்டுமல்லாமல், இயக்குநராகவும் கடந்த 2004 ஆம் ஆண்டு ‘மன்மதன்’, 2006 ஆம் ஆண்டு ‘வல்லவன்’ படங்களை இயக்கினார் சிம்பு. இரண்டு படங்களும் வெற்றி பெற்றதோடு பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தன. இப்படங்கள் வெளியாகி 15 வருடங்களுக்குமேல் ஆனாலும் இப்போதும் பலருக்கு பிடித்த பாடல்களாக அமைந்துள்ளது.

‘மன்மதன்’, ‘வல்லவன்’, ‘சிலம்பாட்டம்’, ‘வானம்’ படத்திற்கு பிறகு மீண்டும் சிம்பு-யுவன் கூட்டணி ‘மாநாடு’ படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்தின், முதல் பாடல் வெளியாகி கவனம் ஈர்த்துள்ள நிலையில், யுவன் ஷங்கர் ராஜா சிம்புடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

அந்த பதிவில், ‘நேரம்’, ‘பிரேமம்’ இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் ‘மன்மதன், வல்லவன் போன்ற யுவன் ஷங்கர் ராஜா இசையுடன் சிம்பு இயக்கும் ஒரு படத்தை பார்க்க விரும்புகிறேன். நீங்கள் இரண்டு பேரும் இயக்குனராகவும் இசையமைப்பாளராகவும் இணைந்து பணிபுரிய வேண்டும் என ஆசைப்படுகிறேன். உங்கள் படைப்புக்கு ஒரு சிறிய ரசிகரிடமிருந்து ஒரு சிறிய வேண்டுகோள்’ என்று கமண்ட் செய்துள்ளார்.