மோடி வருகையால் தான் ‘சந்திராயன் 2’ தோல்வி – குமாரசாமி குற்றச்சாட்டு

மைசூருவில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்திரயான்-2 விண்கலம் நிலவில் தரையிறங்கும் நிகழ்வு நடந்தது. இதை காண்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி பெங்களூருவில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு வந்தார். அவர் வந்தது நிலவில் சந்திரயான்-2 விண்கலம் தரையிறங்குவதை பார்ப்பதற்காக அல்ல. இதையும் ஒரு பிரசாரமாக பயன்படுத்திக் கொள்ளத்தான் பிரதமர் நரேந்திர மோடி எண்ணினார்.

ஆனால் அவர் இஸ்ரோவில் கால் வைத்த நேரம் அங்கிருந்த விஞ்ஞானிகளுக்கும், சந்திரயான்-2 விண்கலத்திற்கும் அபசகுனம் ஏற்பட்டுவிட்டதா என்று தெரியவில்லை. அதனால்தான் விக்ரம் லேண்டர் சரியாக தரையிறங்கவில்லை. சந்திரயான்-2 விண்கலம் நிலவில் தரையிறங்கும் நிகழ்வு தோல்வி அடைந்ததற்கு மோடியின் வருகைதான் காரணம். அவர் இஸ்ரோவுக்கு வராமல் இருந்திருந்தால் சந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கி இருக்கும்.

நாட்டில் உள்ள பிரச்சினைகளையும், நிவாரண நிதிகளையும் கொடுக்க முடியாத பிரதமர் மோடி ரஷ்யாவுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் கொடுத்திருக்கிறார். மோடியின் முன்பு பேசுவதற்கே கர்நாடக பா.ஜனதா தலைவர்கள் பயப்படுகிறார்கள்.

சோமண்ணா வீட்டு வசதித்துறை மந்திரியா? அல்லது தசரா விழா மந்திரியா? என்பது குழப்பமாக உள்ளது. அவர் எப்போதும் தசரா விழா ஏற்பாடுகளைத்தான் கவனித்து வருகிறார். முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவின் தொகுதியான பாதாமியில் மக்கள் சாலைகளில் கூடாரங்கள் அமைத்து தங்கி வருகிறார்கள். அதை சித்தராமையா கண்டுகொள்ளவில்லை. மேலும் அங்குள்ள அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் உள்ளனர். இதனால் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *