மேற்கு வங்காள மாநில அமைச்சர்கள் 2 பேரை கைது செய்த சிபிஐ – கொந்தளித்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி

டெல்லியில் இருந்து  கடந்த 2014ம் ஆண்டு மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவுக்கு சென்ற நாரதா செய்தி நிறுவன பத்திரிகையாளர் ஒருவர் தன்னை தொழிலதிபர் எனக் கூறி, அங்கு முதலீடு செய்ய உதவுமாறு திரிணமுல் அமைச்சர்கள் 7 பேர் உள்ளிட்ட பலருக்கு லஞ்சமாக பணம் கொடுத்து, அதை பதிவு செய்தார்.

இந்த உரையாடல் ஒலிப்பதிவு கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கு முன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. குற்றம்சாட்டப்பட்டவர்களில், தற்போது அமைச்சர்களாக உள்ள சுப்ரதா முகர்ஜி மற்றும் பிர்ஹாத் ஹக்கீம் ஆகிய அமைச்சர்களும் அடங்குவார்கள். இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு மாநில கவர்னர் ஜெகதீப் தங்கார் அனுமதி வழங்கினார்.

இந்நிலையில், விசாரணையை துரிதப்படுத்திய சிபிஐ, இன்று காலை 9 மணியளவில் பிர்ஹாத் ஹக்கீம், சுப்ரதா முகர்ஜி ஆகியோரின் வீட்டிற்கு சென்று அவர்களை விசாரணைக்கு அழைத்து சென்றனர். இதனைத் தொடர்ந்து திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ மதன் மித்ரா, முன்னாள் அமைச்சர் சோவன் சாட்டர்ஜி ஆகியோரையும் சிபிஐ அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். இது அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, கட்சி நிர்வாகிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி, சிபிஐ அலுவலகத்திற்கு சென்று, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அடுத்த சில நிமிடங்களில், அமைச்சர்கள் பிர்ஹாத் ஹக்கீம் மற்றும் சுப்ரதா முகர்ஜி உள்ளிட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டதாக சிபிஐ தெரிவித்தது.

இதனால் கோபமடைந்த மம்தா, ‛சரியான நடைமுறை இல்லாமல் அமைச்சர்களை கைது செய்துள்ளீர்கள். எங்கள் அதிகாரிகள், அமைச்சர்களை கைது செய்தால், என்னையும் கைது செய்ய வேண்டும்,’ என ஆவேசமாக பேசினார்.

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, சிபிஐ அலுவலகத்திற்கு வெளியே ஏராளமான தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.