மேகதாது அணை விவகாரம் – அனைத்துகட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. தமிழ்நாட்டின் நீர் ஆதாரமான காவிரியில் மேகதாது அணை கட்டப்பட்டால் டெல்டா மாவட்டங்களின் விவசாயிகள் வாழ்வாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். நெல் உற்பத்தி குறையும். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிரான இந்த நடவடிக்கையை தமிழக அரசு அனுமதிக்காது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பாவுக்கு கடிதம் எழுதினார்.

இந்த நிலையில், நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சமீபத்தில் டெல்லி சென்று மத்திய நீர்வளத்துறை மந்திரியை சந்தித்து பேசினார். அப்போது மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். இதற்கு பதில் அளித்த மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஜெகாவத் அதை ஏற்பதாக உறுதி அளித்தார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த போதும் மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை விளக்கி கூறினார். தமிழக விவசாயிகள் நலன் காக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தினார். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு மேற்கொண்டுவரும் அனைத்து முயற்சிகளையும் தடுத்து நிறுத்த தமிழக அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சட்டப்பூர்வமான நடவடிக்கைகளையும் அரசு எடுத்துள்ளது.

இந்த நிலையில், மேகதாது பிரச்சினை குறித்து கலந்து ஆலோசிக்க தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளின் ஒருமித்த எண்ணங்களையும் பிரதிபலிக்கும் வகையில் அனைத்துகட்சி கூட்டம் இன்று நடைபெறும். இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி இன்று காலை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் அனைத்துகட்சி கூட்டம் தொடங்கியது. இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். அமைச்சர் துரைமுருகன் உடன் பங்கேற்றார். அ.தி.மு.க. சார்பில் ஜெயக்குமார், மனோஜ் பாண்டியன், பா.ம.க.சார்பில் ஜி.கே.மணி, பா.ஜனதா சார்பில் நயினார் நாகேந்திரன், வி.பி.துரைசாமி ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

தி.மு.க. கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, செல்வப்பெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அதன் தலைவர் தொல். திருமாவளவன், ரவிக்குமார் எம்.பி., நாகை மாலி (மார்க்.கம்யூ), ராமச்சந்திரன் (இந்திய கம்யூ) ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி), பூவை ஜெகன் மூர்த்தி (புரட்சி பாரதம்) ஈஸ்வரன் (கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி) வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி) உள்ளிட்டோர் கலந்து கொள்வதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதில் கர்நாடக அரசு மேகதாது அணை கட்டாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.

இதன் அடிப்படையில் தமிழ்நாட்டின் ஒருமித்த கருத்தை பிரதிபலிக்கும் வகையில் முடிவு எடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. அடுத்தக்கட்ட நடவடிக்கையாக என்ன செய்யலாம் என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது. அதன் அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.