மெரினா கடற்கரை உயிர் காப்பு பிரிவு ஆரம்பிக்கப்படும் – முதலமைச்சர் அறிவிப்பு

தமிழக சட்டசபையில் காவல் மற்றும் தீயணைப்பு துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

அப்போது அவர் 60 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

இணையவழி குற்றங்களை புலனாய்வு செய்யவும் காவல் ஆளுநர்களுக்கு சைபர் குற்றங்களை புலனாய்வு செய்ய தகுந்த பயிற்சி அளிக்கவும் “மாநில இணையதள குற்றப்புலனாய்வு மையம்” சென்னையில் அமைக்கப்படும். இம்மையம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான இணையவழி குற்றங்களை தடுப்பதற்கும், புலனாய்வு மேற்கொள்வதற்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் சிறப்பு கவனம் செலுத்தும்.

மெரினா கடற்கரையில் பொதுமக்கள் நீரில் மூழ்கி இறக்கும் நிகழ்வுகளைத் தடுக்க சென்னை காவல் துறையில் மெரினா கடற்கரை உயிர் காப்பு பிரிவு ஆரம்பிக்கப்படும். கடலோர காவல் படை ஆய்வாளர் தலைமையில் இயங்கும். இப்பிரிவில் கடலோர குழுமம் மற்றும் தீயணைப்புத்துறை மீட்பு வீரர்களுடன் ஒப்பந்த அடிப்படையில் 12 மீனவர்கள் பணி அமர்த்தப்படுவார்கள்.

ரூ.8 கோடியே 42 லட்சம் செலவில் சென்னை தெற்கு மற்றும் வடக்கு பிரிவுகளில் தலா ஒரு தீவிர குற்றவாளிகள் தடுப்பு பிரிவு உருவாக்கப்படும்.

சமூகத்திலும், பொருளாதாரத்திலும் பின்தங்கிய சிறுவர் மற்றும் சிறுமியர் தவறான வழியிலும் எந்த குற்றச்செயலிலும் ஈடுபடாமல் இருக்க சிறுவர்-சிறுமியர் மன்றம் ஏற்படுத்தப்பட்டு இவை அவர்களை நல்வழிப்படுத்தவும், உரிய கல்வி உதவி அளிக்கவும் ரூ.38.25 லட்சம் செலவில் 51 சிறார் மன்றங்கள் உருவாக்கப்படும்.

காவல்துறையினரின் முயற்சிகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் பிரிவு ரூ.4 கோடியே 25 லட்சம் செலவில் சென்னையில் உள்ள 100 பள்ளிகளில் ஏற்படுத்தப்படும். சென்னை பெருநகர காவலில் கூட்டமான இடங்களையும், நீண்ட தூர சாலைகளையும் கண்காணிப்பதற்கென ரூ.3 கோடியே 60 லட்சம் செலவில் நடமாடும் டிரோன் காவல் அலகு ஏற்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.