மெரினா கடற்கரையில் குளித்த 3 பேர் கடலுக்குள் மூழ்கினர் – தேடுதல் பணி தீவிரம்

சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவரது மகன் சபரிநாதன். இவர் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து முடித்துள்ளார்.

சபரிநாதன் அவர்களது நண்பர்களான விமல், தர்மராஜன், சல்மான், சக்திவேல், ஆகாஷ் ஆகியோருடன் நேற்று மெரினா கடற்கரைக்கு குளிக்கச் சென்றார். நண்பர்கள் 6 பேரும் குதூகலமாக குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது கடலில் ஏற்பட்ட ராட்சத அலையில் சபரிநாதன், விமல், தர்மராஜன் ஆகியோர் சிக்கினர்.

இதைக்கண்ட மற்ற நண்பர்கள் அவர்களைக் காப்பாற்றுவதற்காக கூச்சலிட்டனர். ஆனால் அவர்கள் 3 பேரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் அடிப்படையில் அலையில் சிக்கியவர்களை படகுகள் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் தீயணைப்பு துறையினர் மற்றும் கடலோர காவல் படையினர் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அண்ணா சதுக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.