மூன்றாவது நாளாக இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரிப்பு

கொரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,754 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. கடந்த 16-ந்தேதி பாதிப்பு 8,813 ஆக இருந்தது. மறுநாள் 9,062 ஆகவும், நேற்று 12,608 ஆகவும் உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் 15 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

இதில் அதிகபட்சமாக கர்நாடகாவில் 2,329, மகாராஷ்டிராவில் 2,246, டெல்லியில் 1,964 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 43 லட்சத்து 14 ஆயிரத்து 618 ஆக உயர்ந்தது.

தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 15,220 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 36 லட்சத்து 85 ஆயிரத்து 535 ஆக உயர்ந்தது. தற்போது 1,01,830 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பால் மேலும் 47 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,27,253 ஆக உயர்ந்துள்ளது.